'லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசியால் வாடுகிறார்கள்'- கலெக்டரிடம் மனு அளித்த கிருஷ்ணசாமி

பொங்கல் திருநாள் வரும் நேரத்தில் ஒவ்வொரு பட்டாசுத் தொழிலாளர் குடும்பத்துக்கும், பட்டாசு உற்பத்தியாளர்கள் முன்பணமாக ரூ.10,000 வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

பட்டாசுத் தொழிலாளர்

சிவகாசியில் நேற்றைய தினம் நடைபெற்ற பட்டாசு ஆலை வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கொடுத்து பேசிய கிருஷ்ணசாமி, தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில், "பட்டாசுக்குத் தடை விதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று மத்திய, மாநில அரசை வலியுறுத்தி பட்டாசு உற்பத்தியாளர்கள் பத்து நாள்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், அதை நம்பி வாழ்ந்துகொண்டிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசி பட்டினியால் வாடுகிறார்கள். தமிழர்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கல் ஓரிரு நாள்களில் வரவுள்ள சூழ்நிலையில் அதை கொண்டாட முடியாமல் தொழிலாளர் குடும்பங்கள் துயரத்தில் உள்ளனர். காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் நிலையில், ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்துக்கும் வாரம் இரண்டாயிரம் ரூபாயும், பொங்கல் திருநாளை முன்னிட்டு பத்தாயிரம் ரூபாயும் முன்பணமாக கொடுக்க  பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!