வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:23:00 (09/01/2018)

`விபத்துக்கு இதுவும் ஒரு காரணம்!' - மாணவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்திய ஆர்.டி.ஓ

“சாலை விதிகளை மதிப்போம். விபத்து இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” எனக் கோவில்பட்டி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு முகாமில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். 

road safty awareness in kovilpatti

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம் முகாமில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய கோவில்பட்டி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், “விபத்து ஏற்பட சூழ்நிலை மட்டும் இல்லாமல் மனநிலையும் ஒரு காரணம். நாள் ஒன்றுக்கு ஏற்படும் 4 விபத்துகளில் ஒருவருக்கு மரணம் ஏற்படுகிறது. அதில் மற்ற விபத்துகள் கவனம் இல்லாமை, அதிக வேகம், போக்குவரத்து விதி மீறல் ஆகியவற்றால் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிகப்படியான விபத்துகளுக்கு அதி வேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்வதும் காரணமாக அமைகின்றன.   

roady safty awareness in kovilpatti

விபத்துகளில் பெரும்பாலும் ஆண்கள்தான் சிக்குகிறார்கள். சாலையில் செல்லும்போது எப்போதும் இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இடது பக்கமாகவே சென்றால் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். வீட்டிலோ அலுவலகத்திலோ ஏற்படும் பிரச்னைகளுடன் கிளம்பி வாகனங்களை ஓட்டிச் செல்வார்கள். இந்த நேரத்தில் ‘அட்ரினல் ஹார்மோன்’ அதிகமாகச் சுரந்து படபடப்பு ஏற்படும். எனவே, மனக்குழப்பத்தில், கோபத்துடன் வாகனங்களை இயக்கக் கூடாது.  நாம் எத்தனை கி.மீ வேகத்தில் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டே வாகனங்களை ஓட்ட வேண்டும். செல்போன் பேசிக்கொண்டும் இரண்டு மூன்று பைக்குகளில் செல்பவர்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டும் வாகனங்களை ஓட்டிச் செல்லக் கூடாது. இவற்றை வீட்டில் உள்ளவர்களிடமும் உறவினர்களிடமும் கட்டாயம் தெரிவியுங்கள்” என்றார்.

saftry awareness

தொடர்ந்து, “சாலை விதிகளை மதிப்போம். சாலை விதிகளைப் பற்றி அனைவருக்கும் எடுத்துரைப்போம். பைக்குகளில் செல்பவரை ஹெல்மெட் அணிந்து செல்லும்படியும், கார்களில் செல்பவரை சீட் பெல்ட் அணிந்து செல்லும்படியும் அறிவுறுத்துவோம். சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வுப் பழமொழிகளைச் சொல்லி விளக்கம் அளிப்போம். விபத்து இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சாலைவிதிகள் குறித்த அனைத்து சின்னங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு மாணவிகளுக்கு சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டன.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க