வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (09/01/2018)

கடைசி தொடர்பு:23:20 (09/01/2018)

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலுக்குச் செல்பவர்கள் விண்ணப்பிக்கலாம்! ராமேஸ்வரம் பங்குத் தந்தை அறிவிப்பு

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய மக்கள் பங்குபெறுவதற்கான விழா அழைப்பிதழை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ராமேஸ்வரம் பங்குத் தந்தை அந்தோணிசாமிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழா அழைப்பிதழ் வருகை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இன்னும் பிரச்னைக்குரிய தீவாக கச்சத்தீவு இருந்துவந்தாலும் அது புனித தீவாகத்தான் இருநாட்டு மக்களிடையே பார்க்கப்படுகின்றது. இதற்கு அங்குள்ள புனித அந்தோணியாரே காரணம். இங்கு ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் இந்த ஆண்டிற்கான திருவிழா பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில்  நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ராமேஸ்வரம் பங்குத் தந்தை அந்தோணிசாமிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இது குறித்து ராமேஸ்வரம் பங்குத் தந்தையும், கச்சத்தீவு திருப்பயண ஒருங்கிணைப்பாளருமான அந்தோணிசாமி, ''கச்சத்தீவு திருவிழாவுக்கான முறையான அழைப்பிதழ் வந்துள்ளது. பிப்ரவரி 23-ம் தேதி காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து படகுகள் புறப்படும். அன்று மாலை கச்சத்தீவில் திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிலுவைப்பாதை நடைபெறும். அதன்பின் திருப்பலியும், தேர்பவனியும் நடைபெறும். மறுநாள் காலை வழிபாட்டுடன் திருவிழா திருப்பலியுடன் விழா நிறைவு பெறும். மாவட்ட நிர்வாகம் வழக்கம் போல் இந்தத் திருப்பயணத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்க உள்ளன. இதன்படி இந்த ஆண்டு 60 விசைப்படகுகளில் கச்சதீவுக்கு பக்தர்கள் செல்ல உள்ளனர். இதற்கான படகுகள் பதிவு வரும் 10-ம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறும். கச்சத்தீவு செல்ல விரும்பும் பக்தர்கள் பதிவு செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வரும் 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட படகின் உரிமையாளர்கள் தங்கள் படகில் செல்லும் பயணிகளின் உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 30-ம் தேதிக்குள் சேர்பிக்க வேண்டும். வெளிமாநில பக்தர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். புனித அந்தோணியார்மீது பக்தி கொண்டுள்ள பக்தர்கள் மட்டும் இவ்விழாவில் பங்கேற்பதுடன், இருநாட்டு  உறவுகளும் சங்கமிக்கும் இந்த விழாவில் உறவுகளை மதிக்கும் உன்னத நோக்கத்துடனும் பங்கேற்க அழைப்பதாக'' தெரிவித்தார்.

விழா குறித்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் வருகின்ற பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறவிருப்பதாகவும், இதற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்ததால் இதற்கான பணிகளில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.