வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (09/01/2018)

கடைசி தொடர்பு:17:37 (09/01/2018)

போக்குவரத்துத் தொழிலாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட்! அரசின் நடவடிக்கையால் கொந்தளிக்கும் ஊழியர்கள்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று 6 வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இவர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த போக்குவரத்துத்துறை நிர்வாகம், முதல் முறையாகத் தஞ்சையைச் சேர்ந்த 6 தொழிலாளர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பது பரபரப்பான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது எனப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

மாநில அரசின் மற்ற துறை ஊழியர்களுக்கு நிகராக தங்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீடு உள்ளிட்டவைக்காகத் தங்களுடைய சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துவிட்டு, கடந்த 6 ஆண்டுகளாக அவற்றை முறைப்படி செலுத்தாமல் வைத்துள்ள 5,000 கோடி ரூபாயை உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகிறார்கள். இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டார்கள். 37 பெண்கள், 5 குழந்தைகள் உள்பட மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையே மதிவாணன், கஸ்தூரி, தாமரைச்செல்வன், ஜெயவேல் முருகன், ஜெகதீசன், அண்ணாதுரை ஆகியோரை இடைநீக்கம் செய்து  உத்தரவிட்டுள்ளது. ஏன் இவர்கள்மீது மட்டும் இவ்வளவு அவசரமாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், ''தமிழ்நாட்டிலேயே தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில்தான் போராட்டம் வீரியமாக நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள தொழிலாளர்களை முன்மாதிரியாகக் கொண்டுதான் மற்ற மாவட்டத் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சையில் நடைபெற்றுவரும் போராட்டத்தை ஒருங்கிணைக்கக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் தமிழ்நாடு தழுவிய போக்குவரத்துத் தொழிலாளர்கள், பயம் ஏற்பட்டு பணிக்குத் திரும்புவார்கள் எனப் போக்குவரத்து நிர்வாகம் கணக்குப்போடுகிறது" என்கிறார்கள்.