வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (09/01/2018)

கடைசி தொடர்பு:20:00 (09/01/2018)

’’பணிநீக்கம் செய்தால் தொழிலாளர்களின் போராட்டம் வேறுவடிவில் இருக்கும்!’’ - எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்

தமிழகம் முழுவதுமுள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்களை நாளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஆறு நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று, தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, பல்லவன் சாலையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் அவர்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், சாலை முழுவதும் மறிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், 'போராட்டத்தைத் திரும்பப் பெற முடியாத நிலையில் உள்ளோம். அரசிடம் நியாயமான காரணங்கள் ஏதும் இல்லாததால், எங்கள் மீது அரசியல் சாயம் பூசுகின்றனர். எங்களை வன்முறையாளர்கள் போல சித்திரிக்கின்றனர். 2.44 காரணி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தொழிலாளர் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது. தமிழக அரசைக் கண்டித்து நாளை மாநிலம் முழுவதுமுள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். பணிநீக்கம் செய்தால் ஒரு லட்சம் தொழிலாளர்களின் போராட்டம் வேறு வடிவில் இருக்கும்' என்று தெரிவித்தார்.