வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (09/01/2018)

கடைசி தொடர்பு:22:40 (09/01/2018)

முதியவரைத் தாக்கிய ரவுடிக் கும்பல்..!

வீட்டுவாசலில் மது அருந்தியவர்களைக் கண்டித்த முதியவரை ரவுடிகள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். 

சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம், மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். இவருக்கு 75 வயது ஆகிறது. குப்பனின் வீட்டு வாசலில் அமர்ந்து அடிக்கடி சில இளைஞர்கள் மது அருந்துவதும் அவர்களைக் குப்பன் கண்டித்த பின்னர், அவர்கள் அங்கிருந்து வேறு இடத்துக்குச் செல்வதும் அடிக்கடி நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையும் குப்பனின் வீட்டு வாசலில் அமர்ந்து சிலர் மது அருந்தியுள்ளனர். வழக்கம்போல், 'இங்கு ஏன் மது அருந்துகிறீர்கள்' என்று அவர்களிடம் குப்பன் கேட்டு, கண்டித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், முதியவர் குப்பனை அங்கிருந்த நாற்காலியால் தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்த கற்களாலும் அவரை அடித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலால், முதியவர் குப்பனுக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் குப்பனைக் காப்பாற்ற திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர். குப்பனின் கண்பார்வை பறிபோகும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குப்பனைத் தாக்கிய வாலிபர்கள் குறித்து திருவொற்றியூர் போலீஸில் குப்பன் புகார் கொடுத்துள்ளார்.