வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:21:00 (09/01/2018)

அதிக விலைக்கு மதுவிற்றால் ரூ.1,000 அபராதம்! பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் மதுவகைகளை விற்பனை செய்தால், விற்பனையாளருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

TASMAC


தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மூலம் அரசே மதுவிற்பனை செய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் குறைந்த குவார்ட்டர் அளவுள்ள மதுபானத்தின் குறைந்தபட்ச விலை ரூ.100. பீர் விலை ரூ.130 ஆக உள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இந்த மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. குவார்ட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.5-ம், பீர் பாட்டிலுக்கு ரூ.10-ம் கடையிலிருக்கும் விற்பனையாளர்கள் கூடுதலாக வசூலிக்கிறார்கள். 

இதைப்பற்றி புகார்கள் எழுந்து வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் இதுசம்பந்தமாக வாக்குவாதங்கள் நிகழ்வதும் வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றாலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.10 கூடுதலாக விற்றால் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய்க்குக் குறைவான வருவாய் உள்ள டாஸ்மாக் கடைக்கு பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவர் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.