வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (09/01/2018)

கடைசி தொடர்பு:23:40 (09/01/2018)

`வழக்கறிஞர் இப்படித்தான் இருக்க வேண்டும்!' - பொங்கல் விழாவில் நீதிபதி பேச்சு

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாகப் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

              பொங்கல்

இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த விழாவில் வழக்கறிஞர்களுக்கு கோலப்போட்டி, கேரம், பளுதூக்கும் போட்டி, பேட்மின்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்களுக்குப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் நீதிபதி கிருபாகரன் வழங்கினார்.

விழாவில் பேசிய அவர், "தமிழரின் பண்பாடுகளை நாம் தொடர்சியாகக் கடைப்பிடிக்க வேண்டும். மகிழ்ச்சியான ஒவ்வொரு விஷயங்களையும் ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்த வேண்டும். வழக்கறிஞர் தொழில் என்பது மிகவும் தூய்மையான தொழில் அதை நாம் உணர்ந்து பணியாற்ற வேண்டும். வளர்ந்துவிட்டோம் என்பதற்காகச் சீனியர்களை மதிக்காமல் இருத்தல் கூடாது. தொடர்ந்து நம் நட்புறவோடு சீனியர்களின் அன்பைப் பெற வேண்டும். பணத்துக்காக யாரையும் தேடி வழக்கறிஞர்கள் செல்லத் தேவையில்லை. வழக்கறிஞர்களுக்கென ஒரு மரியாதை உண்டு. அதை என்றும் தூக்கி வீசிவிடக் கூடாது.

கிருபாகரன்

நீதிக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். அதிகாரத்தைக் கையில் எடுத்துவிடக் கூடாது. அதேபோல் சீனியர் வக்கீல்கள் ஜூனியர் வக்கீல்களுக்கு பணரீதியாகவும் ஆலோசனைகளை வழங்கியும் தொடர்ந்து உதவி செய்ய வேண்டும். பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு சிறந்தவராகவும் நேர்மையானவராகவும் விளங்க வேண்டும். நீதிக்குப் புறம்பான விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள்’ என்றார்.