காவிரி நீரை தமிழகம் தர வேண்டும்! - புதுச்சேரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற காரைக்காலுக்கு உரிய காவிரி நீரை தமிழக அரசிடமிருந்து போர்க்கால அடிப்படையில் புதுவை அரசு பெற்றுத்தர வேண்டும் என்று காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரப்பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.  

சந்திரப்பிரியங்கா எம்.எல்.ஏ

இதுகுறித்து சந்திரப்பிரியங்காவிடம் பேசினோம். ‘’புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது காவிரி நீரைப் பெறுவதற்கான பெருமுயற்சியில் ஈடுபட்டு, தண்ணீர் பெற்றுதந்ததால் விவசாயிகள் ஓரளவுக்குச் சாகுபடி செய்தனர். ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தது முதல் புதுவை மாநிலத்திற்குரிய காவிரி நீரைப் பெறுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு சம்பா பருவத்திற்கு காவிரி நீர் காலம்கடந்து பெயரளவிற்கே வந்தது. ஓரிரு நாள்களில் அந்தத் தண்ணீரும் நிறுத்தப்பட்டுவிட்டது. காரைக்கால் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு, தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளைச் சந்தித்துப்பேசி தண்ணீர் பெறுவதற்கு எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

ஆழ்குழாய் பாசனம் மற்றும் பருவ மழையைப் பயன்படுத்தி ஆங்காங்கே ஒரு சிலர்தான் சாகுபடி செய்திருக்கிறார்கள். அதுவும் தற்போது கதிர்வைக்கும் பருவமாக இருப்பதால், தண்ணீர்த் தேவை மிகவும் அவசியமாக இருக்கிறது. சில இடங்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே, விவசாயிகள்படும் துயரத்தைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. எனவே, உடனடியாக புதுவை அரசு, தமிழக அரசிடம் பேசி போர்க்கால அடிப்படையில் காவிரி நீரைப் பெற்றுத்தந்து, காரைக்கால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காமல் செய்திட வேண்டும்.  இதுகுறித்து புதுவை அரசுக்கும், தமிழக அரசுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்” என்றார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!