வெளியிடப்பட்ட நேரம்: 09:51 (10/01/2018)

கடைசி தொடர்பு:15:51 (10/01/2018)

“பார்வைத்திறனில்லை; புறக்கணிப்பு... ஆனாலும், பாடகியாக சாதித்த மகள்!” ‘கண்ணம்மா’ பாடல் ‘ஜோதி’யின் மறுபக்கம்

மாற்றுத்திறனாளி ஜோதி

“ ‘இந்தக் குழந்தையால் எதுவும் செய்யமுடியாது; இக்குழந்தை வேண்டாம்'னு சொன்ன பலருக்கும் என் மகளோட இசைத் திறமைதான் பதில். சவாலான பிரச்னைகளை எல்லாம் புறந்தள்ளி தனி அடையாளம் பெற்றிருக்கிறாள்” - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் கலைச்செல்வி. கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் 'கண்ணம்மா கண்ணம்மா' பாடலைப் பாடியதன் மூலம் சமூக வலைதளத்தில் பிரபலமான மாற்றுத்திறனாளி ஜோதியின் தாய் கலைச்செல்வி. இன்றைக்குப் பாடகியாக உயர்ந்திருக்கும் மகளின் வெற்றிக்குப் பின்னிருக்கும் வலிகளைக் கூறுகிறார். 

“எனக்கு சென்னைதான் பூர்வீகம். கல்யாணமாகி 2001-ம் வருஷம் பொண்ணு ஜோதி பிறந்தாள். பிறக்கும்போது கண் இருக்கும் இடத்தில் சதைப் பகுதி மட்டுமே இருந்ததைப் பார்த்து அதிர்ந்தோம். ஜோதிக்குப் பார்வைத்திறன் இல்லைங்கற அதிர்ச்சியிலிருந்து விடுபடறதுக்குள்ளே, ‘குழந்தையின் குடலில் ஓட்டை விழுந்துடுச்சு'னு சொன்னாங்க. குழந்தையைக் காப்பாற்ற ரொம்பவே போராடினேன். 'இந்தக் குழந்தை வேண்டாம்'னு பலரும் சொன்னாங்க. தாய் மனசுக்கு வலிகளைத் தாங்கும் பலம் அதிகம். 'என் குழந்தையின் பிறப்புக்கு ஓர் அர்த்தம் இருக்கும்'னு உறுதியா நம்பினேன். ஒன்றரை மாசத்துக்கும் மேலே ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை கொடுத்ததில் குடல் ஓட்டை சரியாச்சு. 

சிசேரியன் பிரசவம் நடந்திருந்த எனக்கு, டயாபடிக் பிரச்னை ஏற்பட்டுச்சு. எல்லாத்தையும் தாங்கிகிட்டு குழந்தையை ஆளாக்கினேன். ஜோதி வளர வளர மூளை வளர்ச்சி குறைபாடு இருக்கிறது தெரிஞ்சது. ஜோதி அம்மாவுடன்இதுக்கு நடுவுல எனக்கும் என் கணவர் குடும்பத்தாருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு. என் அப்பா வீட்டுக்கு வந்துட்டேன். கால்நடை உதவி ஆய்வாளர் பணியிலேருந்து ஓய்வுபெற்றிருந்த அப்பாவின் பென்சனில்தான் குழந்தையை வளர்த்தோம். வாழ்க்கையில் முதல் அடி விழும்போதுதான் தாங்கிக்கறது கஷ்டமா இருக்கும். அடுத்தடுத்து அடி விழும்போது, 'இதுவும் கடந்து போகும்' உணர்வை கொடுத்துடும். அப்படித்தான் எங்க வாழ்க்கையும். 

மூளை வளர்ச்சி குறைவினால், ஜோதியை முதலில் சேர்த்த தேனாம்பேட்டை பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிஞ்சது. அடுத்து, வாய்பேச முடியாத மற்றும் பார்வைத்திறனில்லா பள்ளியில் சேர்த்தோம். எட்டாவது வரை படிச்சா. அப்போ, ஜோதிக்கு இசைத் துறையில் ஆர்வம் இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டேன். இனி, இசையிலேயே பொண்ணை வெற்றிபெற வைக்கலாம்னு நினைச்சேன்" என்கிறார் அந்தத் தன்னம்பிக்கை தாய். 

அதன்பிறகு ஜோதியின் இசைத் திறமை பன்மடங்கு விரிவடைந்ததைப் பரவசத்துடன் விவரிக்கிறார். “அடையாறு மியூசிக் காலேஜில் மூணு வருஷம் 'இசைக் கலைமணி' கோர்ஸை முடிச்ச ஜோதி, இசை ஆசிரியருக்கான கோர்ஸையும் முடிக்கப்போகிறாள். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிவரும் 'லிட்டலைக்ட்' (litalight) அமைப்பின் உதவியால், பிப்ரவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில 'றெக்க' படத்தில் வரும் 'கண்ணம்மா கண்ணம்மா' பாட்டைப் பாடினாள். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாச்சு. அடுத்த சில நாள்களிலேயே ஜோதியை அழைச்ச ஜி.வி.பிரகாஷ், தான் இசையமைக்கும் 'அடங்காதே' திரைப்படத்தில் பாடவெச்சு ஜோதியைப் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தினார். படம் சீக்கிரம் ரிலீஸாகப்போகுது. இப்போ, மேடை நிகழ்ச்சிகள், வீட்டிலேயே 10 பேருக்கு மியூசிக் டியூஷன், படிப்பு எனத் தொடர்ந்து இயங்கிட்டிருக்கா. கீபோர்டு, வயலின் கத்துக்கிறா. இசையில் பல நுணுக்கமான விஷயங்கள் தெரியுது. பலரும் பொண்ணுகிட்ட இசையில் சந்தேகம் கேட்கிறது பெருமை இருக்கு. 

மாற்றுத்திறனாளி ஜோதி

முன்பைவிட இப்போ மனதளவில் பொண்ணுக்கு நிறையவே பாசிட்டிவ் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. சொல்றதை நல்லாவே புரிஞ்சுட்டு பதில் சொல்றா. எல்லோருக்கும் நான் சொல்றது ஒண்ணுதான். யாருமே பூமிக்கு பாரமா வாழ்றதில்லை. எல்லோர் பிறப்புக்கும் அர்த்தம் இருக்கு. அதைக் கண்டுபிச்சு, அவங்களை சமூகத்துடன் இயங்க வைக்கணும். இவங்களால் முடியாதுனு யாரையும் ஒதுக்கவோ, பரிதாபப்படவோ கூடாது. அந்த வலி ரொம்பவும் கொடுமையானது. ஜோதியின் தாத்தா இறந்து எட்டு மாசமாகுது. என் அம்மா, பொண்ணு, நான்னு வாழ்ந்துட்டிருக்கிறோம்" என்று மகளை கட்டியணைத்துக்கொள்கிறார் கலைச்செல்வி. 

“இதுவரை என் குறைகளை நினைச்சு வருத்தப்பட்டதே கிடையாது. அந்த மன நிலையும் எனக்கு வராது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மியூசிக்தான். அதனால் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்” - வார்த்தைகளில் தன்னம்பிக்கையும் முகம் நிறைய புன்னகையுமாகப் பேசுகிறார் ஜோதி. 

ஜோதி

“பத்து வயசிலிருந்து மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். ஸ்கூல் படிப்பைவிட மியூசிக் மேலே அதிக ஆர்வம் வந்துச்சு. அம்மாவும் அதை சரியா அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினாங்க. ரேடியோ, டிவியில் ஒலிக்கும் சினிமா சாங்க்ஸை சிலமுறை கேட்டாலே மனப்பாடம் ஆகிடும். அப்படித்தான் 'கண்ணம்மா கண்ணம்மா' பாட்டை ஒரு நிகழ்ச்சியில் பாடினேன். நிறையப் பாராட்டு கிடைச்சுது. அந்த வீடியோவைப் பார்த்துதான் ஜி.வி.பிரகாஷ் அண்ணா வாய்ப்பு கொடுத்தார். அவர் சொல்லிக்கொடுத்த மாதிரியே பாடினேன். என் மேல அவருக்கு அதிக பாசம். நிறைய சப்போர்ட்டா இருக்கார். சமீபத்தில், அவள் விகடன் ‘டாப் 10 தமிழ்நாடு பெண்கள்’ பட்டியலில் என்னையும் தேர்தெடுத்திருந்தாங்க. அந்தப் புத்தகத்தை ஜி.வி. அண்ணாவும் இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி அண்ணாவும் தங்கள் ட்விட்டர் பேஜ்ல ஷேர் பண்ணியிருந்தாங்களாம். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இப்போ மேடை நிகழ்ச்சிகள், சர்ச் நிகழ்ச்சிகளில் பாடறேன். பின்னணிப் பாடகியா எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடணும். என் குரல் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தணும். வெளிநாடுகளுக்கெல்லாம் போய் பாடணும்னு ஆசை. என் இசை அந்த வாய்ப்பை எனக்குக் கொடுக்கும்னு நம்பறேன்'' என்கிறார் ஜோதி தன்னம்பிக்கை மிளிறும் இனிய குரலில்.


டிரெண்டிங் @ விகடன்