வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (09/01/2018)

கடைசி தொடர்பு:22:20 (09/01/2018)

பொதுமக்களுக்கும், எங்களுக்கும் இடையேயான உறவு உணர்வுபூர்வமானது! - நெகிழும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்

பொதுமக்களுக்கும் எங்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி செய்கிறது. ஆனால் அவர்களது சூழ்ச்சி வெற்றி  பெறாது. காரணம் எங்களுக்கும் பொதுமக்களுக்குமான உறவு உணர்வுபூர்வமானது என்கிறார்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று ஆறாவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் தஞ்சையைச் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்களான மதிவாணன், கஸ்தூரி, தாமரைச்செல்வன், ஜெயவேல் முருகன், ஜெகதீசன், அண்ணாமலை உள்ளிட்ட 6 பேரை போக்குவரத்துதுறை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

இதற்கிடையே இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தஞ்சை பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதிவாணன் உள்ளிட்டவர்களை நேரில் சென்று சந்தித்தோம்.அவர்கள் கூறுகையில், ‘’எங்களது நியாயமான கோரிக்கைகளைப் பொது மக்கள் மனதார ஏற்றுக்கொள்கிறார்கள். நீண்டகாலமாக குக்கிராமங்களுக்குள் எல்லாம் எங்களது ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருள்களை நகரத்திலிருந்து வாங்கிக் கொடுத்து உதவுகிறார்கள். மாமன், மச்சான், அக்கா, தம்பி என உரிமையோடு உறவு சொல்லி அழைத்து பழகி வருகிறார்கள். வீட்டு விஷேசங்களில் பரஸ்பரம் கலந்துகொள்ளும் அளவுக்கு உன்னதமான உறவு நீடிக்கிறது. கடும் மழை, புயலிலும் இரவு, பகலாகப் பேருந்துகளை ஓட்டுகிறோம். கடுமையான பணிச்சுமை, ஆபத்தான சவால்கள், குறைவான ஊதியம், பழுதடைந்த பேருந்துகள் என எங்களது சிரமங்களைக் கண்டு பொதுமக்கள் வேதனைப்படுகிறாகள்’ என்றார்.