விகடன் செய்தியால் டிக்கெட் விலையைக் குறைத்த தனியார் பேருந்துகள்! புதுக்கோட்டை பயணிகள் மகிழ்ச்சி

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒருசில பகுதிகளில் தனியார் பேருந்துகள் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது.   

இதுதொடர்பாகக் கடந்த 6-ம் தேதி, '20 ரூபாய் டிக்கெட் இப்போ 70 ரூபாய்! - தனியார் பேருந்துகளுக்கு எதிராகக் கொதிக்கும் புதுக்கோட்டை மக்கள்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் எதிரொலியாகப் பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தனியார் பேருந்துகள் நிறுத்திக்கொண்டுவிட்டன. இப்போது முன்பிருந்த கட்டணத்தையே வசூலிப்பதால் புதுக்கோட்டை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 5-ம் தேதி மாலையில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசுடன் நடந்தப் பேச்சுவார்த்தையில் நல்லமுடிவு எட்டப்படாததால், வேலைநிறுத்தம் செய்யும் சூழலுக்கு ஆளாக்கப்பட்டதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் அப்போது கூறினார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர்கள், உடனடியாகக் கட்டணத்தை உயர்த்தினார்கள். வழக்கமான கட்டணத்தைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகப் பயணிகளிடம் கட்டணம் வசூலித்தனர். இந்தத் திடீர் கட்டணக்கொள்ளையால் பயணிகள் பரிதவித்துப்போனார்கள். எதிர்ப்புக்காட்டிய பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிட்ட கொடுமைகளும் நடந்தன. 'பக்கத்துல இருக்கிற இடத்துக்கு ஆட்டோவுக்கு 200, 300 ரூபாய் கொடுத்துப் போறீங்க. பல கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற ஊருக்குப் போக 50 ரூபாய் அதிகமா கேட்டால் தரமாட்டீங்களா' என்று தனியார் பேருந்தில் பணிபுரியும் நடத்துநர்களும் ஓட்டுநர்களும் கேட்ட நியாயமற்றக் கேள்விகளை எதிர்கொள்ள இயலாமல் பயணிகள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

அதிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் இந்தக் கட்டணக் கொள்ளையில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டன. இதை ஆதாரத்துடன் விகடன் உடனடியாக வெளிப்படுத்தியது. இதையடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர்களைத் தொடர்புகொண்ட போக்குவரத்து அதிகாரிகள், 'உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கவும் வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்யவும் இந்தச் செய்தியே போதுமானது. ஆனாலும், உங்களுக்கு ஒரு வாய்ப்புத் தருகிறோம். பயணிகளிடம் முன்பிருந்ததுபோல நியாயமான கட்டணத்தை வசூலித்தால் நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டோம். அதையும் மீறி, நீங்கள் தொடர்ந்து அதிக கட்டணத்தை வசூலித்து, பயணிகளிடம் அடாவடியாக நடந்துகொண்டால், நாங்கள் நிச்சயம் உங்கள் பேருந்துகளுக்குக் கொடுத்திருக்கும் பர்மிட்டை ரத்து செய்ய வேண்டியாதாயிருக்கும்' என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து வழக்கமான கட்டணத்தையே வாங்குமாறு தங்களின் ஊழியர்களுக்ந்த் தனியார் பேருந்து உரிமையாளர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். அதன்படி, திருச்சிக்குச் செல்ல 66 ரூபாய் வசூலித்தவர்கள், இப்போது, 25 ரூபாய் மட்டுமே கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!