வெளியிடப்பட்ட நேரம்: 00:20 (10/01/2018)

கடைசி தொடர்பு:00:20 (10/01/2018)

பறவைக்காய்ச்சல் எதிரொலி! கர்நாடகக் கோழிக்கு தமிழ்நாட்டில் தடை

கர்நாடக மாநிலத்தில் உள்ள பண்ணைக்கோழிகளுக்குப் பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அங்கிருந்து வரும் முட்டைகள், கோழிகள், தீவனம் மற்றும் மருந்துகள் தமிழ்நாட்டில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளன. தமிழக எல்லையில் நுழையும் சுமை வாகனகங்களுக்குத் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கால்நடைப் பராமரிப்புத்துறை மற்றும் கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்கள் இணைந்து அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை இரவு பகலாகச் செயல்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இதுகுறித்து ஈரோட்டில் இயங்கும் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிமையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் ஆர்.செல்வராஜ் கூறும்போது, “நாமக்கல் பகுதியில் ஆயிரக்கணக்கில் முட்டைக் கோழிப்பண்ணைகளும் திருப்பூர் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் கறிக்கோழிகளும் பண்ணைகள் அமைத்து வளர்க்கப்படுகின்றன. அதேபோல், தமிழகம் முழுவதும் விவசாயத்தின் ஓர் அங்கமாக நாட்டுக்கோழி வளர்ப்பு பெருமளவில் நடக்கின்றன. ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் கோழிவளர்ப்பு, கிராமப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சில பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, தமிழ்நாட்டில் அது பரவாமல் வருமுன் காப்போம் என்கிற நோக்கில் கால்நடைத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதே சமயம் பண்ணையாளர்களுக்கும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோழிகளுக்கு நோய் அறிகுறி இருப்பது தெரிந்தால் உடனே உரிய கால்நடை மருத்துவரை அழைத்து தீவிர மருத்துவம் பார்க்க வேண்டும். இறந்த கோழிகளை உடனடியாக எரியூட்ட வேண்டும். பண்ணைகளைச் சுத்தமாக வைப்பதுடன், முழுமையாகத் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். இளம்குஞ்சுகளைத் தனியாகப் பிரித்து அடைத்து தடுப்பு ஊசிகள் போட வேண்டும். நீர் நிலைகள் அருகில் இருந்தல் அதில் மேயும் வாத்துக் கூட்டங்களைக் கண்காணித்து அவை மூலம் பறவைக்காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதா என்று கண்டறிந்து நோய்த் தடுப்புப் பறக்கும் படைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். வாத்துக்கூட்டம் நீந்தும் தண்ணீரைக் கோழிப்பண்ணைக்குப் பயன்படுத்தக் கூடாது. இனப்பெருக்கத்துக்காக இங்கு வந்து ஏரி, குளங்களில் தங்கும் வெளிநாட்டுப் பறவைகள் மூலம் பறவைக்காய்ச்சல் இங்கு பரவும் வாய்ப்பு உள்ளதால், அதற்கு வாய்ப்புள்ள நீர்நிலைகளையும் கண்காணித்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலால் ஒரு கோழி இறப்புக்கூட நிகழ்ந்துவிடக் கூடாது... என்பதில் கால்நடைத்துறை மற்றும் ஆராய்ச்சி மையம் உறுதியாக உள்ளது” என்றார்.