வெளியிடப்பட்ட நேரம்: 00:40 (10/01/2018)

கடைசி தொடர்பு:00:40 (10/01/2018)

களவுபோன கோமேதக லிங்கத்தை மீட்டுத்தர வேண்டும்! - நாகை நுகர்வோர் சங்கம் கோரிக்கை

நாகை நீலாயதாட்சி அம்மன் உடனுறையும் காயாரோகண சுவாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன கோமேதக லிங்கத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன் முசுகுந்த சக்ரவர்த்தியாலும், சாளுக்கிய மன்னர்களாலும் நாகை நீலாயதாட்சி அம்மன் கோயில் கட்டப்பட்டது.  இக்கோயில் பிரசித்திபெற்ற 127 சிவத்தலங்களுள் 87-வது தலமாகவும், சக்தி பீடங்களில் முதலாவது தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் தசரத சக்ரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்ட சனீஸ்வர பகவான் தனி சன்னதி இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் மிகவும் புனிதமாகப் போற்றப்படுகிறது. சப்தவிடங்கர் தலங்களுள் ஒன்றான இக்கோயிலில் கோமேதகத்தால் ஆன சுந்தரவிடங்கர் லிங்கம் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு செய்வது பெருமைக்குரிய ஒன்றாக இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்தக் கோமேதக லிங்கம் கடந்த 19 ஆண்டுகளுக்குமுன் கொள்ளைபோனது. இந்த லிங்கம் சுமார் ஒன்றரைக் கிலோ எடை உள்ளது. தேன் நிறத்திலான விலை மதிப்பற்ற கோமேதக லிங்கத்துடன் சேர்ந்து பழைமைவாய்ந்த ஸ்படிக லிங்கமும் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது.  

இக்கோயிலுக்கு மணிமகுடமாகவும் பக்தர்களின் வழிபாட்டுக்கு நெஞ்சம் நிறைந்ததாகவும் இருந்த கோமேதக லிங்கத்தையும், ஸ்படிக லிங்கத்தையும் தமிழக அரசு கண்டுபிடித்து இக்கோயிலில் கொண்டு வந்து சேர்க்க இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க