Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”ஒரு மாதப் போக்குவரத்துச் செலவு ஒரே வாரத்தில் காலி!” - போராட்டத்தால் குமுறும் சாமானியர்கள் #TNBusStrike

போக்குவரத்து

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆறாவது நாளை எட்டியுள்ளது. அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறி தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் கடந்த 4 -ம் தேதி குதித்தன.போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தத் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நிலைமை ஓரிரு நாள்களில் சரியாகிவிடும் எண்ணிய பொதுமக்களுக்கு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அலுவலகங்களுக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் எனப் பலரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

கிருஷ்ணராஜ்இதுதொடர்பாகப் பேருந்துக்காகக் காத்திருந்த பொதுமக்கள் சிலரிடம் பேசினோம்."போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை அவர்களுக்கு முறையாகக் கொடுத்தால் அவர்கள் ஏன் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போகிறார்கள்? எனவே, அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அலட்சியமே இத்தனை பிரச்னைகளுக்குக் காரணம்'' என அவர்கள் கொதிக்கிறார்கள்.   

கல்லூரி மாணவரான கிருஷ்ணராஜ் பேசுகையில், ''தாம்பரத்திலிருந்து வருகிறேன். என்னைப் படிக்கவைக்கவே என் பெற்றோர் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ஆட்டோவுக்கு எப்படி அவர்களால் காசு கொடுக்க முடியும்? ஒருநாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஆறு நாள்களாகப் பேருந்துகள் வரவில்லை. இப்படியே போனால் வீட்டில் முடங்குவதைத் தவிர, வேறு வழியில்லை. எனவே, இங்கு போக்குவரத்து ஊழியர்களை குறைசொல்வதை விட்டுவிட்டு, தமிழக அரசு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். 

சென்னையில் வேலைதேட வந்த இளைஞர் ஒருவர், ''ஏற்கெனவே காசு இல்லாமல்தான் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த வேலைதேடுபவர் நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் மேலும் அதிகமான பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். சென்னையும் எனக்குப் புதிது என்பதால் ஆட்டோக்காரர்கள் கேட்கும் காசைக் கொடுக்க வேண்டியுள்ளது. சரி, இங்கேதான் பிரச்னை இப்படி இருக்கிறதே என மீண்டும் ஊருக்குப் போகலாம் என்றால், கையில் காசு கொஞ்சமாகத்தான் உள்ளது. அரசுப் பேருந்தாக இருந்தால், இருக்கிற காசு போதுமானதாக இருக்கும்'' என்றார் கவலையுடன்.  

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர், ''ஒரு சட்டமன்ற உறுப்பினருக்குச் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறது தமிழக அரசு. இதுவரை எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை தொகுதிகளில் தங்களது வேலைகளைச் சரிவரச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம்?அப்படி வேலையே செய்யாதவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்கிறபோது, இரவுபகல் பாராமல் வேலை செய்யும் ஓட்டுநர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தித் தருவதில் இந்த அரசாங்கத்துக்கு என்ன சிக்கல் இருக்கிறது? போக்குவரத்து ஊழியர்களின் இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உண்மை. அதற்காகப் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை குறை சொல்ல முடியாது'' என்றார் கொதிப்புடன்.

இக்பால் தனியார் நிறுவன ஊழியரான இக்பால், ''இந்த ஆறு நாள்களாக மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறேன். விடிந்தால் ஏன் விடிகிறது என்று எண்ணத் தோன்றுகிறது.அலுவலகத்துக்குப் போகாமல் இருக்கவும் முடியாது. வாங்குகிற 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கடந்து ஆறு நாள்களில் ஆயிரம் ரூபாய்வரை ஆட்டோவுக்குச் செலவழித்துள்ளேன். ஒரு மாத போக்குவரத்துச் செலவே ஒருவாரத்துக்கான செலவாக ஆகியிருப்பது வேதனையளிக்கிறது'' என்றார்.

குடும்பத்தலைவி ஒருவர், ''நான் ஒருத்தி வேலை செய்துதான் குடும்ப வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. வாங்குகிற சம்பளத்தைச் சேமிக்க வேண்டும் என்பதற்காகக் குறைவான டிக்கெட் உள்ள வெள்ளை போர்டு பேருந்தில்தான் போவேன். பெண் ஊழியர் மாசக்கடைசியில் பேருந்தில் செல்வதற்குக்கூடக் காசு இருக்காது. அந்த அளவுக்குக் குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்னை. ஊழியர்கள் போராட்டத்தால் தற்போது எந்தப் பேருந்தும் வருவதில்லை. அதனால், கடந்த இரண்டு மூன்று நாள்களாக ஷேர் ஆட்டோவில் வந்துகொண்டிருக்கிறேன். ஒருநாளைக்கு 60 ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது. இதனால் கையைப் பிசைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' என்றார் கவலையுடன்.

தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர், ''பொருளாதாரப் பிரச்னை கழுத்தை நெரித்தாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்கிற காசைக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைவைத்து ஆட்டோ  ஓட்டுநர்கள் பொதுமக்களைச் சுரண்டுகிறார்கள் என்பதை இந்த அரசாங்கத்துக்கு எப்படிப் புரியவைப்பது என்பது தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கமிட்மென்ட் உள்ளது. இதில், ஆயிரக்கணக்கில் போக்குவரத்துக்காகச் செலவுசெய்தால் நிலைமை என்ன ஆகும்" என்றார்வேதனையுடன்.

பொருளாதாரப் பிரச்னை, ஆட்டோக்கள் நேரத்துக்குக் கிடைக்காத நிலைமை எனப் பொதுமக்கள், பல பிரச்னைகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். அதேநேரத்தில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்களின் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. சமான்யர்களின் இந்தக் குரலுக்காவது செவி சாய்க்குமா தமிழக அரசு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement