"ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் என்னாச்சு?"- தினகரன் மழுப்பல்

தினகரன் - செய்தியாளர்கள் சந்திப்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றது ஒட்டுமொத்த தமிழகமும், ஆட்சியாளர்களும் எதிர்பாராததாகும். மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசின் கைப்பாவையாக எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு செயல்படுவதாகவும், ஓ.பி.எஸ்-வுடன் இணைந்த பின்னர் இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டதாகவும், திட்டமிட்டே தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலை அறிவித்ததாகவும் பரவலான குற்றச்சாட்டு எழுந்தது.

தவிர, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டம், நீட் தேர்வு, உதய் மின்திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிராக ஒருவார்த்தைகூட தெரிவிக்காமல் அப்படியே எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டது போன்ற பல்வேறு காரணிகளால் ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றிபெற்றதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

'தி.மு.க.-வும், தினகரனும் சதி செய்ததாலேயே, ஆளும் அ.தி.மு.க வேட்பாளரின் தோல்விக்குக் காரணமாகி விட்டது' என்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடியும் குற்றம்சாட்டியுள்ளனர். 

ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தின்போது, "எடப்பாடி தலைமையிலான தமிழக அரசை வீட்டுக்கு அனுப்புதற்கு, தனக்கு வாக்களியுங்கள்" என்று ஓட்டுக்கேட்ட தினகரன் தற்போது அந்த கோஷத்தை சற்றே அடக்கி வாசிக்கிறார் என்றே தெரிகிறது. 

எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற தினகரன், டிசம்பர் 29-ம் தேதி சபாநாயகரைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்பட ஆறேழு பேர் மட்டுமே தனக்கு எதிராகச் செயல்படுவதாகவும், பலர் தங்கள் அணிக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்தார். அந்த ஆறேழுபேர் யார், யார் என்று செய்தியாளர்கள், தினகரனிடம் கேட்டபோது, போகப்போகத் தெரியும் என்று மழுப்பலாகப் பதிலளித்தார். ஆனால், அப்போதும் ஆட்சியைக் கவிழ்ப்பது பற்றி தினகரன் மூச்சு விடவில்லை. 

தினகரன் - சட்டசபையில்இந்தச் சூழ்நிலையில்தான் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்றக்கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டசபையில் முதல் நாள் ஆளுநர் உரையைப் புறக்கணித்து விட்டு, தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், தினகரன் மட்டும் தனி ஆளாக அமர்ந்திருந்தார். தினகரன் சட்டசபைக்கு வந்தபோது, தி.மு.க. உறுப்பினர் ஜெ. அன்பழகன் கைகுலுக்கினார். 

அதுபற்றி பேட்டியளித்த தினகரன், மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்ததாகவும், அதற்கு தான் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது, சபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரைப் பார்த்து சிரித்ததாக சசிகலா புகார் கூறினார். ஜெயலலிதா எதிரியாகப் பாவிக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த செயல்தலைவருடன் நட்பு பாராட்டுவதாகவும், துரைமுருகன். சட்டசபையிலேயே "நாங்கள் இருக்கிறோம்" என்று ஓ.பி.எஸ்ஸூக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறி, அவரை பதவியிலிருந்து விலக சசிகலா குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனால், அதே தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ, தினகரனுடன் கைகுலுக்குகிறார். 

இதைவைத்துப் பார்க்கும்போது, ஆர்.கே. நகர் தேர்தலின்போது, தி.மு.க-வுடன் கைகோத்து தினகரன் செயல்பட்டார் என்ற முதல்வர், துணை முதல்வரின் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமே என்ற சந்தேகம் எழுகிறது. 

மேலும் முதல்நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், நாடாளுமன்ற உறுப்பினராக 11 ஆண்டுகளாகப் பதவி வகித்ததாகவும், சட்டசபையில் தமிழில் பேசுவதால் தான் ஹேப்பியடைந்துள்ளதாகவும் கூறினார். 'தமிழ்நாடு சட்டசபையில் தமிழில்தானே விவாதம் நடைபெறும். இதுவரை தினகரனுக்கு அது தெரியாதா' என மற்றொரு செய்தியாளர் கேள்வியெழுப்பினார். 

மேலும் 'ஆறுபேர் வெளியேறினால் எல்லாம் சரியாகி விடும்' என ஏற்கெனவே தெரிவித்த தினகரன், இப்போது இரண்டுபேர் என்று மாற்றிக் கொண்டார். அ.தி.மு.க-வில் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் பங்காளிகள் என்றார் தினகரன். ஆறுபேர் இப்போது இரண்டுபேராகக் குறைந்தது ஏன்?. அப்படியானால், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். இணக்கமாகப் போனால், அவர்களையும் ஏற்றுக் கொள்வாரா? 'இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவோம்' என்று ஆர்.கே.நகர் தேர்தலின்போது தெரிவித்த கூற்று என்னவாயிற்று என்றும் அரசியல் ஆர்வலர்கள் வினவியுள்ளனர்.

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையானதும், தமிழன் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்தார் தினகரன். இதுவே ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, தி.மு.க-வைச் சேர்ந்தவர்களுடன் நட்பு பாராட்டியிருக்க முடியுமா? மக்களவை சபாநாயகர் மு.தம்பிதுரை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வின் மகனுடன் தன் மகளுக்குத் திருமணம் நடைபெற்றபோது, மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அந்தத் திருமணத்தைப் புறக்கணித்தார் என்பது வரலாறு.

சட்டசபையில் தினகரன்"எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாகப் பார்க்கக் கூடாது" என்று தற்போது தெரிவிக்கும் தினகரன், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க முடியுமா எனக் கேள்வியெழுப்புகின்றனர் அரசியல் நோக்கர்கள். 

தமிழக அரசின் மீது அவநம்பிக்கை கொண்டே மக்கள், தினகரனுக்கு வாக்களித்தார்கள் என்பதே உண்மை. ஆனால், அதே மக்கள் எடப்பாடி அரசை கவிழ்க்காவிட்டால், எதிர்காலத்தில் தினகரனுக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. 

தமிழக அமைச்சர்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்வதாகக் குற்றம்சாட்டும், தினகரன் கடந்த பிப்ரவரி மாதம் வரை ஊழல் குற்றச்சாட்டை தெரிவிக்காதது ஏன்? ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, கடந்த ஆட்சியின்போது நடைபெற்ற முறைகேடுகளின் பின்னணியில் சசிகலா குடும்பம் இருந்ததில்லையா? அப்போதெல்லாம் தினகரன் எங்கே இருந்தார்? என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன. 

"ஊருக்கு ஒரு நியாயம்; தங்களுக்கு ஒரு நியாயம்" என்பதுதான் தினகரனின் திட்டமா? இந்த ஆட்சியை அகற்றும் நடவடிக்கைகையை தினகரன் எடுப்பாரா மாட்டாரா? தினகரன் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏன் என்பது போன்ற பல கேள்விகள் மக்களிடம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!