வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (10/01/2018)

கடைசி தொடர்பு:01:00 (10/01/2018)

குடும்பத்துடன் போராட்டத்தில் களமிறங்கிய போக்குவரத்து ஊழியர்கள்!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் 6 -வது நாளை எட்டியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.  

தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும்வரை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாகத் தங்களின் குடும்பத்துடன் கூடிய போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள், தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அவர்கள், "போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, நிலுவையில் உள்ள பணப் பயன்களை வழங்காமல் அரசு காலம் தாழ்த்தி வருவது வேதனையளிக்கிறது. தொடர்ந்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், தொழிலாளர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் இந்த அரசு அலட்சியத்துடனேயே செயல்பட்டு வருகிறது. எனவே எங்களுக்கான நீதி கிடைக்கும்வரை தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவிருக்கிறோம்’’ என்றனர்.