வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (10/01/2018)

கடைசி தொடர்பு:01:20 (10/01/2018)

நெருங்கும் பொங்கல்! கனடா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பானைகள்

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம். பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இதையொட்டி புதுப்பானை விற்பனை சூடு பிடித்துள்ளது.

இதைப்பற்றி பானை தயாரிப்பில் ஈடுபட்டுவரும் சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் கூறும்போது, ''நாங்க குலாலர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மண்பாண்டங்கள் செய்வது எங்களுடைய குலத்தொழில். தாத்தா, அப்பா காலத்திலிருந்து வாழையடி வாழையாக இந்தத் தொழில் செய்து வருகிறோம். 

நான் டிப்ளமோ எலெட்க்ட்ரிகல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு சேலம் மாநகராட்சியில் வேலை பார்த்து வந்தேன்.  சொந்தத் தொழில் செய்யலாம் என்று ஆர்வம் வந்ததையடுத்து அரசு வேலைக்கு முழுக்கு போட்டு விட்டு, எங்கள் குலத்தொழிலான மண் பாண்டத் தொழில் செய்ய தொடங்கினேன். தாத்தா, அப்பாவைப் போல அல்லாமல் தொழிலை விரிவாக்கி அதில் புதுமையைப் புகுத்தி தமிழர்கள் அதிகமாக வாழும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன்.

பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புதுப்பானை வாங்குவது சூடு பிடித்து விட்டது. தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள். இந்தத் தொழில் மூலம் ஒரு மாதத்திற்கு குறைந்து ஒரு லட்சம் சம்பாதிக்கலாம். சின்ன வயதிலிருந்து இதைக் கற்றுக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் இருந்து வருகிறது. 

இந்தப் பானைகளைச் செய்வதற்கு முதலில் தரமான களிமண்ணை எடுத்து தண்ணீரில் கரைத்து வெள்ளைத் துணியால் வடித்து நிழலில் காய வைக்க வேண்டும். பிறகு தூய்மையான களிமண் கிடைக்கும். அத்தோடு மணல் சேர்ந்து நன்றாக மிதிக்க வேண்டும். பிறகு மண்ணை உருண்டை பிடித்து சக்கர ராட்டையில் சுற்றி தேவையான அளவில் தேவையான வடிவத்தில் உருவம் கொடுத்து செம்மண் பூசி சூளையில் வேக வைத்து எடுக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான மனிதர் ஒரு நாளைக்கு 60 பானைகள் செய்ய முடியும்.

பல அளவுகளில் பானைகள் தயார் செய்து கொடுப்போம். என் மனைவி ஐஸ்வர்யா பானைகளுக்கு வர்ணங்கள் பூசி விற்பனை செய்கிறார். ஒரு பானை 50 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பொங்கல் நெருங்கி வருவதை அடுத்து பொங்கல் பானை விற்பனை சூடு பிடித்துவிட்டது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் பானை வாங்குவது அதிகரித்து வருகிறது'' என்றார்.