தீவிரமடையும் போராட்டம்... பொங்கலுக்குப் பேருந்துகள் இயக்கப்படுமா? TNBusStrike

பேருந்துகள்

மிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தொடர்போராட்டம் நீடித்துவரும் நிலையில், தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மாநில அரசு தற்போது எவ்விதமுயற்சியும் எடுக்கவில்லை. இதனால், அடுத்த சில தினங்களில் பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வோருக்குப் பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.

ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகையை வழங்காதது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 4-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழகப் பணியாளர்களுக்குப் பல ஆண்டுகளாக வழங்காமல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலிருந்து 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசுடன் தொழிற்சங்க நிர்வாகிகள், நடத்திய 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தை முறியடிக்க, தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை இயக்கி வருகின்றனர் அதிகாரிகள். ஊழியர்களின் போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் அன்றாடம் வேலைக்குச் செல்வோர்,  பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்துத்தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பல்வேறு இடங்களில் 60 முதல் 80 சதவிகித பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அதுவும், ரூட் தெரியாத, சரிவர பேருந்துகளை இயக்கத்தெரியாத புதியவர்களைக் கொண்டு இயக்கப்படுவதால் பேருந்தில் பயணம் செய்வோர் மிகுந்த அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஒருசில இடங்களிலும் முன் அனுபவம் இல்லாத தற்காலிக ஓட்டுநர்களால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் மெத்தனப்போக்கு :

இந்தநிலையில், 'போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை உடனடியாகக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையென்றால் தொழிலாளர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால்,தொழிலாளர்களோ, "எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்கும்வரை, போராட்டத்திலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்" என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, "இன்றைக்குள் (ஜனவரி 9) பணிக்குத் திரும்பும் போக்குவரத்து பணியாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். 

போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 80 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் சற்றுகுறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். என்றாலும், தமிழகம் முழுவதும் 80 சதவிகிதம் அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதுதான் உண்மைநிலை. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களை வைத்து மிகக் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில், அதற்காகப் பல கோடி ரூபாய் செலவு செய்த அ.தி.மு.க அரசு, போக்குவரத்துக்கழக பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பதில் மெத்தனம் காட்டிவருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்விடுமுறை வருவதால், அதற்காகப் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலையில், பேருந்தில் செல்ல முன்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 'பொங்கலுக்கு எப்படி ஊருக்குச் செல்லப்போகிறோமோ' என்ற தவிப்பில் மக்கள் உள்ளனர். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல இப்போதே தயாராகிய நிலையில், பேருந்து போக்குவரத்து சீரடையாததால், செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். பண்டிகைக்காலங்களில் மட்டும் சென்னையிலிருந்து ஏழு முதல் 10 லட்சம் மக்கள் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். கோவை, திருப்பூர், சேலம், மதுரை உள்ளிட்டமாவட்டங்களிலிருந்து பல லட்சம் பேர் வெளியூர்களுக்குச் செல்வார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் நீடிக்குமானால், லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதென்பது கேள்விகுறிதான்? 

பேருந்து நிலையம்

பொங்கல் விடுமுறைக்காக ஜனவரி 11,12,13-ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 11,983 பேருந்துகள் இயக்கப்படும். இதில் சென்னையிலிருந்து ஜனவரி 11-ம் தேதி 3,069 பேருந்துகளும், 12-ம் தேதி 4,054 பேருந்துகளும் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு மையங்கள் சென்னையின் முக்கியப் பேருந்து நிலையங்களில் செயல்படும் என்று ஏற்கெனவே அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படாததால், பொதுமக்கள் மிகுந்த தவிப்பில் உள்ளனர். பொங்கலுக்கு முன் போராட்டம் முடிவுக்கு வந்து, மாநிலம் முழுவதும் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுமா என்ற சந்தேகம் இப்போதே எழுந்துள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஊர் முழுவதும் கொண்டாடிய, எடப்பாடி பழனிசாமி அரசு, பொதுமக்கள் பிரச்னையான போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தில் பாராமுகம் காட்டிவருவது, அனைத்துத் தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எப்போது முடிவுக்கு வரும் பேருந்து ஸ்டிரைக் எனப் பொதுக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!