வெளியிடப்பட்ட நேரம்: 01:40 (10/01/2018)

கடைசி தொடர்பு:01:40 (10/01/2018)

தற்காலிக ஓட்டுநர்களால் தொடரும் விபத்து! - சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

அரசுப் பேருந்தை இயக்கும் தற்காலிக ஓட்டுநர்களால் தொடர் விபத்து ஏற்படுவதாகக்கூறி, திருப்பூரில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூரைச் சேர்ந்த தங்கமணி என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் இன்று காங்கேயம் சாலை என்ற பகுதியில்
சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காங்கேயம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று, தங்கமணியின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் தங்கமணி காயமடைந்தார். காயமடைந்த தங்கமணியை அப்பகுதி மக்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்தநிலையில், அந்த அரசுப் பேருந்தை தற்காலிக ஓட்டுநர் ஓட்டியதால்தான் விபத்து நேரிட்டதாகக்கூறி, தங்கமணி வசிக்கும்  பகுதியைச் சேர்ந்த மக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடத் தொடங்கினர். அப்போது, "அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், மாவட்ட நிர்வாகம் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்க வைக்கிறது. இதனால் திருப்பூர் மாவட்டப் பகுதிகளின் வழியாகச் செல்லும் அரசுப் பேருந்துகளால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதன்முலம் அப்பாவிப் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்" என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர். பின்னர் சம்பவ  இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.