நெல்லைப் போக்குவரத்து பணிமனையைக் குடும்பத்துடன் முற்றுகையிட்ட ஊழியர்கள்!

வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். 

போக்குவரத்து ஊழியர் போராட்டம்

நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 6-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக, பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. நெல்லை மாநகரில் மட்டும் 180 ஓட்டுர்களும் 140 நடத்துநர்களும் பணிக்கு வராததால் போக்குவரத்து முடங்கியது. மாவட்டம் முழுவதும் பணிக்கு வராத 3,850 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக போக்குவரத்து ஊழியர்கள் இன்று குடும்பத்துடன் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, ஊழியர்களின் போராட்டம் காரணமாக கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அவற்றை இயக்க ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இல்லாததால், கிராமப் பகுதிகளுக்கான பேருந்து சேவை முழுமையாக முடங்கியது. அதனால், கிராமங்களிலிருந்து அரசு அலுவலகங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் செல்பவர்கள் ஆட்டோக்களில் செல்லும் நிலைமை உருவானது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்பவர்கள், பேருந்து இயங்காததால் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்தப் போராட்டம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!