வெளியிடப்பட்ட நேரம்: 02:20 (10/01/2018)

கடைசி தொடர்பு:08:01 (10/01/2018)

"பொழப்பே போச்சு சார்": அரசின் மெத்தனப் போக்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 6 நாள்களைக் கடந்துவிட்டது. ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க அரசுக்கு இன்னும் மனது வரவில்லை. எம்.எல்.ஏ-க்களுக்கு 100 சதவிகித சம்பள உயர்வு கொடுக்கும் அரசு, தினசரி பலநூறு கி.மீ கடக்கும், போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் அடிப்படை ஊதிய உயர்வு மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகையைக்கூட வழங்க மனம் இறங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துவருகிறது.

ஆறுமுகம்

எம்.எல்.ஏ-க்களுக்குக் கொடுக்கும் ஊதியம் அளவுக்கு அவர்கள் கேட்கவில்லை. பக்கத்து மாநிலங்களில் இதே வேலைகளைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கு, கொடுக்கப்படும் ஊதியத்தைத்தான் அவர்கள் கேட்கின்றனர். தொழிலாளர்கள் மீதுதான் அக்கறை இல்லை என்றால், எந்த மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்ந்துள்ளார்களோ, அவர்களின் நிலைமையையும் சிந்தித்துப் பார்க்க மறுத்து வருகிறது தமிழக அரசு. தற்காலிக ஓட்டுநர்களை பணியில் அமர்த்தி, தினசரி பல்வேறு விபத்துகளை ஏற்படுத்தி, மக்களின் உயிரோடு விளையாடி வருகிறது. அரசுப் பேருந்தை மட்டுமே நம்பியுள்ள, அன்றாடங்காய்ச்சிகள், இதனால் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அக்கறை அரசுக்குத் துளியும் இல்லை.

அரசின் மெத்தனப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், ஆறுமுகமும் ஒருவர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். போலியோ தாக்கியதில், சிறு வயதிலிருந்தே ஆறுமுகம் மாற்றுத்திறனாளி. அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினசரி அவரது சிறு கிராமத்திலிருந்து, இரண்டு பேருந்துகள் மாறி, இரண்டு மணி நேரம் பயணம் செய்து கோவைக்கு வந்து கர்சீஃப் விற்று, தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

ஆறுமுகம்

“எனக்கு பஸ் பாஸ் இருக்கு சார். ஆனா, அரசு பஸ்ஸே வரதில்ல. பிரைவேட் பஸ்லதான் வந்துட்டு போய்ட்டு இருக்கேன். அப் அண்ட் டவுனுக்கு 100 ரூபா செலவாய்டும். கவர்மென்ட் பஸ் இல்லாததால, பிரைவேட் பஸ்ல செம கூட்டம். இந்தக் கால வெச்சுட்டு போய்ட்டு வர ரொம்பவே கஷ்டமா இருக்கு. கர்சீஃப் விற்கறத வெச்சுத்தான் என் பொழப்பு இருக்கு. ரெண்டு நாளா வியாபாரமே இல்ல சார். இன்னிக்கு ஒரு கர்சீஃப் கூட போகல. வீட்ல இதனால ஏகப்பட்ட பிரச்னை. கடன் வாங்கிட்டுத்தான் கோயம்பத்தூருக்கே வந்தேன். வீட்டுக்குப் போனா பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துத்தான் ஆகணும். ஆனா, ஊருக்கு வரதுக்கே கடன் வாங்கிட்டு வர வேண்டியதா இருக்கற, இந்தச் சூழ்நிலைய நா என் வீட்ல எப்படி புரிய வைப்பேன்” என்றார் வேதனையுடன்