வெளியிடப்பட்ட நேரம்: 02:40 (10/01/2018)

கடைசி தொடர்பு:08:24 (10/01/2018)

அரசுப் பேருந்திலும் கட்டணக் கொள்ளை! தற்காலிக நடத்துநர்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஊழியர்கள் கூடுதல் வசூல்

ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய பலன்களை ஊழியர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான இடங்களுக்குப் போக்குவரத்து சேவை முடங்கி உள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவை முடங்கியிருக்கிறது. போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குச் செல்லாததால், தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு போக்குவரத்து சேவையை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்காலிகப் பணியாளர்களால் விபத்துகள் ஏற்படுவது ஒருபுறம் இருக்கையில், தற்காலிக நடத்துநர்கள் வரைமுறை இல்லாமல் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.    

கூடுதல் கட்டணம்

தென்காசியிலிருந்து நெல்லைக்குச் செல்லும் பேருந்தில் பாவூர்சத்திரத்திலிருந்து நெல்லைக்கு 26 ரூபாய் கட்டணத்துக்குப் பதிலாக 32 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதேபோல, அடைக்கலப்பட்டணத்திலிருந்து நெல்லைக்கு 22 ரூபாய்க்குப் பதிலாக 29 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பேருந்தின் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், புதிதாகப் பணிக்கு வந்துள்ள நடத்துநர்கள் அதனைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள். அரசுப் பேருந்தில் மட்டும் அல்லாமல் தனியார் பேருந்துகளிலும் கட்டணக் கொள்ளை நடக்கிறது. நெல்லை மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்திலிருந்து சுரண்டைக்குச் செல்லும் பேருந்தில் 7 ரூபாய்க்குப் பதிலாக 10 ரூபாய் டிக்கெட் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். வழக்கமாகப் பேருந்தில் செல்லக்கூடிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்தக் கூடுதல் கட்டணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க