தமிழை நேசிக்கிறேன்! - நெகிழும் பெல்ஜியம் போட்டோகிராபர் ஹென்க் ஒச்சப்பன்

பெல்ஜியத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஹென்க் ஒச்சப்பன். ஸ்ட்ரீட் போட்டோகிராபரான இவரின் புகைப்படங்கள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வியலையும், காலாசாரத்தையும் பிரதிபலித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றன.

கிராமப்புற தமிழ் மக்களின் வாழ்க்கை, எளிமையான மக்களின் போர்ட்ரைட், தென்னகத்து லேண்ட்ஸ்கேப்புகள், தமிழ் கலாசாரம், பண்பாடு, ஜல்லிக்கட்டு போன்றவைகளுக்கு இவரின் ஸ்பெஷல் கிளிக்குகள் பட்டியலில் தனி இடமுண்டு. தாய்நாட்டை விட தமிழ்நாட்டில் அதிக காலம் செலவிடும் அளவிற்கு தமிழ் கலாசாரக் காதலன் இந்த ஹென்க் ஒச்சப்பன்.

மதுரையில் என்.எஸ்.எஃப் ஸ்கிரீன்ஸ் மற்றும் ட்ரீம்ஸோன் நடத்திய புகைப்பட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு தனது அனுபவங்களையும்,கருத்துகளையும், கம்போஸிங், போஸ்ட் ப்ராஸஸ் போன்றவற்றின் நுட்பங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில்,"புகைப்படம் என்பது பேசுவதைப் போன்றது, எளிய சொற்களைக் கொண்டே நல்ல கருத்துகளை ஆடியன்ஸிடம் கொண்டு சேர்க்க முடியும். அதேபோன்று எளிமையான உபகரணங்களைக் கொண்டே நல்ல புகைப்படங்கள் எடுக்கலாம். நான் புரஃபஷனல் போட்டோகிராபர் இல்லை. நானொரு ப்ரஃபஷனல் அம்மெச்சூர் வகை போட்டோகிராபர். ப்ரஃபஷ்னல் என்றால் வரைமுறைக்கு உட்பட்டுதான் செயல்பட முடியும். கற்றுக்கொண்ட விஷயத்தை மட்டுமே செயல்படுத்திப் பார்க்க முடியும். நான் ப்ரஃபஷனல் அம்மெச்சூர் என்பதால், எப்படி வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம், எனக்கான வரைமுறைகள் கிடையாது" என சிரித்துக்கொண்டே தொடர்கிறார்,

"1985-ல் எனது தாயார் இறந்துவிட்டார். பின் அவரின் எண்ணங்கள் வரும்போது மதுரைக்கு வந்து விடுவேன். இங்குள்ள கலாசாரங்களைப் புகைப்படம் எடுப்பதை மேலிருந்து பார்த்து, என் தாய் நிச்சயம் சந்தோஷப்படுவார் என நம்புகிறேன். கிளாசிக்கல் மொழிகள் யாவும் தற்போது நடைமுறையில் இல்லை, தமிழைத் தவிர. உண்மையில், ரசனைமிக்க மொழி தமிழ். நான் தமிழையும், அதன் கலாசாரத்தையும் மிகவும் ரசிக்கிறேன்."என ஆங்கிலத்தில் பேசினார். அவர்,  "நன்றி வணக்கம்"எனத் தமிழில் கூறி உரையை முடித்துக்கொண்டார். 

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஹென்க்-கின் பெயருக்குப் பின்னார், ஒச்சப்பன் என்ற பெயர் சேர்ந்தது சுவாரஸ்யமானது. இதுகுறித்து அவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு விவரித்திருக்கிறார். ‘கடந்த 1994-ம் ஆண்டு ஒச்சப்பன் என்ற ட்ரை சைக்கிள் ஓட்டும் தொழிலாளி ஒருவரைப் பார்த்து, அவர்பால் ஏற்பட்ட ஈர்ப்பால், எனது பெயருடன், அவரது பெயரைச் சேர்த்துக் கொண்டேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.    

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!