வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (10/01/2018)

கடைசி தொடர்பு:08:35 (10/01/2018)

தடை செய்யப்பட்ட பறவையை சந்தையில் வைத்து விற்றவர் சிறையில் அடைப்பு!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், பறவைகளைக் கூண்டில் அடைத்துக் கொண்டுவந்து திருப்பூர் வாரச் சந்தையில் விற்பனையில்  ஈடுபடுவதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர், வனத்துறையினருக்கு தகவல் அளித்திருக்கின்றனர். பின்னர் வாரச் சந்தை நடைபெற்ற தென்னம்பாளையம் பகுதிக்கு வந்து விசாரணை நடத்திய வனத்துறையினர், அங்கு பறவை விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செந்தில்குமாரை பிடித்து சோதனை நடத்தியிருக்கிறார்கள். 

அப்போது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் பறவை இனமான முனியாஸ் என்ற பறவை ரகத்தை அவர் கூண்டில் அடைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடமிருந்து 24 முனியாஸ் பறவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து செந்தில்குமார் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் வழக்குப் பதிவுசெய்து, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, செந்தில்குமார் கோவை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவலர்கள்.