வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (10/01/2018)

கடைசி தொடர்பு:09:12 (10/01/2018)

ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்: மீட்க உதவுமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஈரான் நாட்டில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவர்கள் ஈரான் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த நாட்டு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக அவர்கள் சிறையில் உள்ள நிலையில், அவர்களை மீட்க உதவுமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். 

அந்தக் கடிதத்தில், `நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவர்கள் துபாய் கடல்பகுதியில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது, ஈரான் கடல் எல்லைக்குள் சென்றுவிட்டனர். அவர்களை அக்டோபர் 24-ம் தேதி ஈரான் கடலோரப் படையினர் கைதுசெய்தனர். அவர்களும் அவர்களின் இரு படகுகளும் கிஸ்க் தீவில் ஈரான் படையினரால் கடந்த இரு மாதத்துக்கும் மேலாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 

அவர்களின் வழக்கு குறித்து விசாரித்த ஈரான் நீதிமன்றம் 15 பேருக்கும் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அந்த அபராதத் தொகையை மீனவர்களின் சார்பாக அவர்களின் ஸ்பான்சர்கள் ஏற்கெனவே ஈரான் நீதிமன்றத்தில் செலுத்திவிட்டனர். ஆனாலும், மீனவர்கள் அனைவரும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் தீவுப் பகுதியில் சிறைவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.     

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களில் வினிஸ்டன் என்ற குமரி மாவட்ட மீனவர், நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு ரத்த அழுத்தமும் இருப்பதால், அங்கு மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டபடி இருக்கிறார். தூத்துக்குடி மாவட்ட மீனவரான கிரோஸ்டன் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டவர். இதுபோல நோயாளிகளாக இருக்கும் மீனவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள்கூட கிடைக்காததால் சிரமத்துடன் இருக்கிறார்கள். 

குடும்பத்தின் வறுமையான சூழல் காரணமாக மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற இந்த மீனவர்கள் ஈரான் சிறையில் இருப்பதால் அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த பொருளாதாரச் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். சிறையில் இருக்கும் உறவினர்களை மீட்கும் வழி தெரியாமல் மிகுந்த மன வேதனையுடன் இருக்கிறார்கள். அதனால் இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் ஈரான் தூதரகத்தைத் தொடர்புகொண்டு விரைவாக தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்தக் கடிதத்தில் பிரதமரை வலியுறுத்தி உள்ளார்.