``வாழ்க்கையில நிம்மதியும் இல்ல, போதிய சம்பளமும் இல்ல!' - குமுறும் போக்குவரத்துத் தொழிலாளர் குடும்பத்தினர்

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மண்டல போக்குவரத்துப் பணிமனை அலுவலகத்துக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் மனைவி, குழந்தைகளோடு போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கைதானார்கள். பிறகு அவர்களை மண்டபத்துக்குக் கொண்டுசென்று தங்கவைத்தனர் போலீஸார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட செல்வராணி, ''எங்க வீட்டுக்காரர் பெயர் சிவக்குமார். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். எங்களுக்கு ஶ்ரீதர்ஷிணி என்ற ஒரு மகள் இருக்கிறாள். நாங்க ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கைக்காட்டியில் குடியிருக்கிறோம். வாங்குற சம்பளம் குழந்தைகள் படிக்க வைப்பதற்குக்கூட போதவில்லை. மற்ற தொழிலாளர்களின் மனைவிகளை போல போக்குவரத்துக் தொழிலாளிகள் மனைவி, குழந்தைகள் இருக்க முடியாது. கணவன் வேலைக்குப் போயிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தால்தான் நிம்மதி வரும். வேலைக்குச் சென்ற ஒவ்வொரு நொடியும் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போல ஒவ்வொரு போக்குவரத்துத் தொழிலாளிகளின் மனைவியும், குழந்தைகளும் பறிதவித்துக் கொண்டிருப்போம். வீட்டில் நிம்மதி இல்லாமலும், போதிய சம்பளமும் இல்லாமலும் தவிக்கிறோம்'' என்றார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட விஜயலட்சுமி, ''எங்க வீட்டுக்காரர் பெயர் செந்தில்குமார். பெருந்துறை டிப்போவில் வேலை பார்க்கிறார். எங்களுக்கு ஜெய் ஆகாஷ் என்ற மகன் இருக்கிறான். இந்த அரசாங்கம் யாராருக்கோ பணத்தை வாரி இறக்கிறது. ஒரு நொடி கூட கண் இமைக்காமல் வேலை பார்க்கும் உண்மையான உழைப்பாளிகளுக்கு இந்த அரசாங்கம் போதிய சம்பளம் கொடுப்பதில்லை. ஒரு கையெழுத்தை போட்டுட்டு மாசம் ஒரு லட்சம் வாங்கும் அரசியல்வாதிகள், உண்மையாக உழைக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கஷ்டங்களை எப்படி உணர முடியும். ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிடி பணங்கள் கொடுக்காததால் அந்த குடும்பங்கள் நடு நோட்டுக்கு வந்துவிட்டன. போக்குவரத்து ஊழியர்கள் நியாயமான போராட்டம் வெற்றி பெறும் வரை என் கணவரோடு நானும் சேர்ந்து போராடுவேன்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!