`இது ஆண்மைய பெருக்குங்க...' - சமூக விரோதிகளால் ஆலிவ் ரிட்லிக்கு வந்த ஆபத்து

கோடியக்கரை கடலோரம் அபூர்வ வகை ஆமையான ஆலிவ் ரிட்லி இடும் முட்டைகளை சமூக விரோதிகள் களவாடி, `இவை ஆண்மையை பெருக்கும் வயாகரா' என்று ஏமாற்றி விற்பனை செய்யும் கொடுமை நடக்கிறது.  

பசுபிக் கடலில் வசிக்கும் அபூர்வ வகையான ஆலிவ் ரிட்லி ஆமைகள் கடலைச் சுத்தம் செய்து மீன் இனம் பெருகுவதற்கு உதவுகின்றன. இவை ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்யும். இந்தச் சமயங்களில் கடலோரம் மணல் பரப்பில் குழி தோண்டி அதில் 300 முதல் 500 முட்டைவரை இட்டுச் செல்லும். அந்த முட்டைகள் மனிதர்களாலோ, விலங்கினங்களாலோ மிதிப்பட்டு, உடைபட்டு அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும், இவ்வகை ஆமைகளால் நமது கடலில் மீன்வளம் பெருகும் என்பதாலும் இதனை இந்திய வனத்துறை சேகரித்து ஆமைப் பொறிப்பகத்தில் வைத்து காப்பாற்றி, அந்தக் குஞ்சுகளைப் பத்திரமாக கடலில் விடுகின்றனர்.  

அந்த வகையில், தற்போது நாகை மாவட்டம், வேதாரண்யம் கோடியக்கரை கடல் பகுதியில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வந்து முட்டையிடுகின்றன. இதுபற்றி கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானிடம் பேசியபோது, ``1982-ம் ஆண்டு முதல் அரசு உத்தரவுப்படி ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகளை சேகரித்து அதைக் குஞ்சு பொறிக்க வைத்து கடலில் விடுகிறோம். இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், இந்தக் குஞ்சுகள் வளர்ந்து அது முட்டையிடும் பருவத்தை எட்டும்போது, பிறந்த அதே இடத்துக்கு வந்துதான் முட்டையிடும். இப்படி வரும் ஆமைகள் படகில் அடிபட்டு ஆயிரக்கணக்கில் இறக்கின்றன. மீனவர் வலையில் சிக்கினாலும் அதை உயிரோடு எடுத்து கடலில் விடும்படி அறிவுறுத்துகிறோம். மீன்வளம் பெருக மீனவ சமூதாயத்துக்கு உதவும் ஆலிவ் ரிட்லி ஆமைகளையும், அதன் முட்டைகளையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை” என்றார்.  

அதேப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ``ஆமை முட்டைகளை அவித்தும், ஆம்ப்லெட் போட்டும் சாப்பிடுவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாய் சமூக விரோதிகள் சிலர் கடற்கரையிலிருந்து இந்த முட்டைகளைத் திருடி, இந்த முட்டைகளை சாப்பிட்டால் ஆண்மை பெருகும், வயாகராவைவிட வீரியம் அதிகமானது என்ற தவறான தகவலைக்கூறி விற்பனை செய்து பணமாக்குகிறார்கள்.  ஆமை முட்டை ஆம்ப்லெட் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கிறார்கள். வெளியூரிலிருந்து வசதி படைத்தவர்கள் கார் மூலம் வந்து வாங்கிச் செல்லும் கொடுமையும் நடக்கிறது. ஒரு ஆமை இடும் முட்டைகளை அள்ளி வந்தாலே 500 முட்டைகள் தேறும். ஒரு முட்டை 10 ரூபாய் என்றால்கூட, ரூ.5 ஆயிரம் சம்பாதித்துவிடுகிறார்கள். இந்த மூன்று மாதத்துக்கும் ஆமை முட்டைகளின் ரகசிய வியாபாரம் இப்பகுதியில் கனஜோராக நடக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். ஆண்மையைப் பெருக்கும் ஆமை முட்டை என்பது தவறான கருத்து என்ற விஷயத்தை அனைவருக்கும் புரியவைக்க வேண்டும். இதை யார் செய்வது? என்றுதான் தெரியவில்லை” என்று முடித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!