"கூல்டிரிங்க்ஸ் வேண்டாம்... இளநீர், நுங்கு சாப்பிடுங்க" - மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அட்வைஸ்!

"கூல்டிரிங்க்ஸ் குடிக்காதீங்க... அதுக்கு பதிலா இளநீர், நுங்கு சாப்பிடுங்க" என்று மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அட்வைஸ் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன்

கோவையின் பெருமை, கலாசாரம் ஆகியவற்றை பறைசாற்றும் விதத்தில், கடந்த வாரம் கோவை விழா தொடங்கியது. பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில், கிட்டத்தட்ட 170 நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாக, பள்ளிகளில் மாணவர்களுக்கான உடல்பருமன் தடுப்புத் திட்டம்குறித்த நிகழ்ச்சி, வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல, ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகளும் இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

திட்டத்தைத் தொடங்கிவைத்து சிவகார்த்திகேயன் பேசுகையில், "பிட்சா, பர்கர் எல்லா சாப்பிடக்கூடாது. அது உடம்புக்கு கேடு. உடல் எடையை அதிகரிக்கும். உடல் பருமன் வாழ்க்கை முறை மாறியதால் வந்த விஷயம். எனவே, உடல் பருமனுள்ள குழந்தைகளைக் கிண்டல் செய்யக் கூடாது. நாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் பருமனைக் குறைத்துவிடலாம். அதேபோல, கூல்டிரிங்ஸையும் குடிக்காதீங்க. நான் கூல்டிரிங்க்ஸ் குடிக்கறத விட்டு ஏழு வருஷம் ஆச்சு. நான் இப்படி சொல்றதனால, கூல்டிரிங்ஸ் நிறுவனங்கள் என் மீது கோபப்பட வாய்ப்புள்ளது.

சிவகார்த்திகேயன்

அதற்காக, மக்களுக்கு கேடு விளைவிக்கற ஒரு விஷயத்த பண்ணக்கூடாது. அதனாலயே, ஒரு கூல்டிரிங்க்ஸ் கம்பெனியோட விளம்பரத்துல நடிக்க மறுத்துட்டேன். நான் இந்த நிலைமைல இருக்க மக்கள்தான் காரணம். என்ன நம்பி தியேட்டருக்கு வந்து, என்ன இந்த இடத்துல வெச்சுருக்கற மக்களுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு நன்மையத்தான் செய்யணும்.

அதுக்காகத்தான் வேலைக்காரன் மாதிரியான படங்கள் நடிக்கறேன். அந்தப் படத்துல உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி சொல்லியிருப்போம். காமெடி படங்கள் மட்டும் இல்லாம, அப்பப்ப வேலைக்காரன் மாதிரியான படங்களில் நடிக்கவும் ஆசை. சோ, கூல்டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்காதீங்க. அதுக்கு பதிலா, இளநீர், நுங்கு சாப்பிடுங்க. உடம்புக்கும் நல்லது" என்றார்.

உடல் பருமன் தடுப்புகுறித்து மாணவர்களுக்கு உறுதிமொழியையும் சிவகார்த்திகேயன் வாசித்தார். விஜயகார்த்திகேயன் வீட்டுக்கு நேரில் சென்றும் இந்த விஷயம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.  நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், "நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!