வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (10/01/2018)

கடைசி தொடர்பு:16:16 (12/07/2018)

"கோஷம் போடக்கூடாது... கூட்டம் கூடக்கூடாது!" - போராட்டக் களத்தில் கெடுபிடி காட்டிய போலீஸ்புதுக்கோட்டை பதிய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு காவல்துறையின் அணுகுமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதனை அனுமதிக்காத காவல்துறை 'கூட்டம் கூடக்கூடாது. கோஷம்போடக்கூடாது' என்று கெடுபிடிகாட்ட,,. அங்கு இரண்டுத் தரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்தப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் எழுந்தது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆறு நாள்களாக தொடர்ந்து வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்தவகையில், தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆரம்பம் முதலே களத்தில் போராடி வருகிறது. புதுக்கோட்டையிலும் அந்தக்கட்சியின் சார்பாக, கடந்த திங்கட்கிழமை அன்று திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, நகர காவல்நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், போலீஸ் அனுமதி தர மறுத்தது. கூடவே, காவல்துறை சார்பாக கடிதம் தயார் செய்யப்பட்டு, அதனை கட்சியின் அலுவலகத்தில் உள்ள தூண் ஒன்றில் போலீஸாரே ஒட்டிச்சென்று விட்டார்கள்.

இதனால், அதிர்ச்சியடைந்த கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அவசரமாக ஒன்றுகூடி, அடுத்தக்கட்ட  நடவடிக்கைகளுக்காக ஆலோசனை நடத்தினார்கள். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நேற்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். போலீஸுக்கும் இதுகுறித்துத் தகவலை முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி காலை ஒன்றுகூடிய கட்சியினரை, "இங்கே கூட்டம் கூடக்கூடாது. கோஷம் எதுவும் போடக்கூடாது. மீறினால், கைது செய்யப்படுவீர்கள்" என்று காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அதைப் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தமாகி ஒன்றுகூடினார்கள். போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு இரண்டு தரப்பினரிடையே முதலில் வாக்குவாதம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, கட்சியினர் போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆகையால், அவர்களை போலீஸார் கைதுசெய்வதாகக் கூறி, குண்டுக்கட்டாகத்  தூக்கி வேனில் ஏற்றினர். மாலை ஆறு மணிக்கு மேல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

‎இதுகுறித்து் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கவிவர்மனிடம் பேசினோம். "எந்தப் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, கூட்டம் நடத்தினாலும் போலீஸாரின் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தால், போலீஸார் அனுமதிப்பதில்லை. இதனைக்கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றோம். அதற்கும் போலீஸார் அனுமதிக்கவில்லை. கூட்டம் கூடாமல் கோஷம் போடாமல் எப்படி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பதை போலீஸார் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஒரு போராட்ட வடிவத்தை நமது காவல்துறை புதிதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி மக்களுக்கு உள்ள போராட்ட உரிமையை, தங்களது அடக்குமுறை நடவடிக்கைக் கொண்டு போலீஸார் ஒடுக்க நினைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று சீறினார்.