வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (10/01/2018)

கடைசி தொடர்பு:07:02 (10/01/2018)

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை தங்க மோசடி விவகாரம்... போலீஸ் விசாரணை விறுவிறு!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. புதிய சோமாஸ் கந்தர் சிலை மற்றும் ஏலவார் குழலி அம்மன் சிலை, பழைய சோமாஸ் கந்தர் சிலை ஆகியவற்றில் எள்ளளவு கூட தங்கம் இல்லை என ஆய்வின் முடிவில் தெரியவந்தது. இந்த நிலையில், செயல் அலுவலர் முருகேசனிடம் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்திவருகிறார்.

சோமாஸ் கந்தர் சிலை, காஞ்சிபுரம்

இந்து அறநிலையத்துறையின் உத்தரவின் பேரில் புதிய சோமாஸ் கந்தர் உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016 டிசம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. உபயதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்து அறநிலையத்துறை குறிப்பிட்ட அளவுக்கு சிலைகளில் தங்கம் கலக்கப்படவில்லை எனவும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் அவரது மகன்கள் தினேஷ், பாபு ஆகியோர் கோயில் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர். அதன் அடிப்படையில் தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், கோயில் அர்ச்சகர்கள் என 9 பேர்மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. மேலும் இந்து அறநிலையத்துறை ஆய்வில் சிலைகளில் தங்கம் இல்லாதது தெரியவந்ததால் வழக்கு விறுவிறுப்படைந்துள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்துக்கு, செயல் அலுவலர் முருகேசன் வரவழைக்கப்பட்டு அவரிடம் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணை செய்தார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க