பிறந்து 4 நாள்களேயான யானைக்குட்டி சேற்றில் சிக்கி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே பிறந்து 4 நாள்களே ஆன குட்டி யானை ஒன்று அதன் கூட்டத்துடன் சென்றபோது ஏரியில் தவறி விழுந்து சேற்றில் சிக்கி பலியானது.

கிருஷ்ணகிரி அருகே குட்டியானை பலி

கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த நவம்பர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தேவர்பெட்டா காடு வழியாக, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் சுற்றிவந்தன. இந்த யானைகள் நொகனூர், ஜவளகிரி, வட்ட வடிவுப்பாறை உள்பட, வனப்பகுதிகளில் பலவாகப் பிரிந்து, அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்திவருகின்றன. இந்த நிலையில், உத்தனப்பள்ளி அருகே, சானமாவு காட்டுப் பகுதியில் 44 யானைகள் முகாமிட்டுள்ளன. 

அதில் ஒரு யானை, கடந்த 4 நாள்களுக்கு முன்பு  ஒரு குட்டியை ஈன்றது. இந்தக் குட்டி, அதன் தாய் யானை மற்றும் கூட்டத்துடன் சேர்ந்து அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வந்தது. நேற்று காலை, இந்த யானைகள் அனைத்தும் உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமம் பக்கமாக அங்குள்ள ஷேசன்ன ஏரி பகுதியைக் கடந்துசென்றபோது, குட்டி யானை ஏரியில் தவறிவிழுந்து சேற்றில் சிக்கிக்கொண்டது. சிறிது நேரத்தில் குட்டி யானை இறந்துவிட்டது. தன்னுடன் வந்த குட்டி யானை இறந்ததைக் கண்ட மற்ற யானைகள் சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்று பிளிறின. பின்னர் அவை, சானமாவு காட்டுக்குள் சென்றுவிட்டன. யானைகள் கடந்துசென்றதும்,  விவசாய நிலங்களைப் பார்க்கச் சென்ற கிராம மக்கள், குட்டி யானை சேற்றில் சிக்கி இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, வன கால்நடை மருத்துவர் பிரகாஷ், ராயக்கோட்டை வனச்சரகர் பாபு மற்றும் வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்துசென்றார்கள். அவர்கள், சேற்றில் சிக்கி இறந்துகிடந்த குட்டி யானையை மீட்டனர். பிறகு, அந்த யானையைப் பிரேதப் பரிசோதனைசெய்து புதைத்துவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!