வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (10/01/2018)

கடைசி தொடர்பு:10:09 (10/01/2018)

சரணாலயம் வரும் பறவைகளைப் பாதுகாக்க கிராம மக்களிடையே விழிப்பு உணர்வுத் திட்டம்

பறவைகள் சரணாலயம் வரும் வெளிநாட்டுப் பறவைகளைப் பாதுகாப்பதுகுறித்த விழிப்பு உணர்வை இளைஞர்கள், மாணவர்கள், கிராம மக்களிடையே ராமநாதபுரம் வன உயிரினக் காப்பக அலுவலர்கள் ஏற்படுத்திவருகின்றனர்.

சரணாலயம் வரும் பறவைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், சக்கரக்கோட்டை, தேர்த்தங்கல், மேலச்செல்வனூர்- கீழச்செல்வனூர் உள்ளிட்ட இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளன. இந்தச் சரணாலயங்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கூலைக்கடா, கரண்டிவாயன், மஞ்சள்  மூக்கு நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்கள் வந்து தங்கிச் செல்கின்றன. அக்டோபர் மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை இந்தப் பறவைகள் இடம்பெயர்ந்து வந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க வரும் இந்த அரிய வகை வெளிநாடு வாழ் பறவைகள், சமூக விரோதிகளின் வேட்டைக்கு அவ்வப்போது ஆளாகி உயிரிழந்துவருகின்றன. இதைத் தடுக்கும் வகையில், ராமநாதபுரம் வன உயிரினக் காப்பக அதிகாரிகள், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்களிடையே பறவைகளின் வருகைகுறித்தும், அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கென, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பறவைகள் சரணாலயப் பெயர்கள் பொறித்த டீ-சர்ட்டுகள், தொப்பி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வனச்சரகர் சதீஷ் வழங்கி, பறவைகள் பாதுகாப்பில் அவர்களையும் இணைந்து செயல்பட வலியுறுத்தி வருகிறார்.