வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (10/01/2018)

கடைசி தொடர்பு:10:02 (10/01/2018)

போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்கும் மதுரை... பரிதாப நிலையில் மக்கள்!

தமிழக அரசுப் பேருந்து ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 
 

கடந்த ஆறு நாள்களாக, போக்குவரத்துத் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால், மக்கள் தங்களின் போக்குவரத்துக்கு வேறு வழிகளை தேடிக்கொள்ளவேண்டிய நிலைக்கு வந்துவிட்டனர். மக்களின் தேவையை உணர்ந்து பலரும் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், அனுமதி இல்லாத பல தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால், மதுரை நகர்ப் பகுதி, போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது. மேலும், இஷ்டத்துக்கு கட்டண நிர்ணயம்செய்து, மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறது ஒரு கூட்டம். முன்பைவிட அதிக ஆட்டோக்களும், இருசக்கர வாகனங்களும் உபயோகத்தில் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாக உள்ளது. தேவையற்ற இடங்களில்கூட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்துசெல்கின்றன. இது தவிர, முன்அனுபவம் இல்லாத ஓட்டுநர்களால், நேர்ந்த விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும் நேற்று, அஷ்டமி சப்பரம் வீதி ஊர்வலம் என்பதால், சிம்மக்கலில் இருந்து பெரியார் செல்லும் வழக்கமான பாதைக்குப் பதிலாக, தெற்கு வாசல் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால், நெரிசல் இரட்டிப்பானது.


இதுவரை, மிதமான போக்குவரத்து நெரிசலில் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த மதுரை போக்குவரத்துக் காவல்துறையினருக்கு, அலைமோதும் மக்கள் கூட்டம், அதிகமான போக்குவரத்து நெரிசல், தொடர் விபத்துகள், என அடுத்தடுத்து அமைவது, பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. நகரின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், வழக்கமற்ற இந்தச் சூழலைச் சமாளிக்கவும், கைவசம் ஐடியா இல்லாமல் திக்குமுக்காடிப்போகிறது மதுரை மாநகராட்சி காவல்துறை.

இதுகுறித்து மதுரை மக்கள், "பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தாலும் முன்பைவிட நெரிசல் அதிகமாகவே உள்ளது. காலை 7.30 மணி முதல் 10.30 வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் இந்தப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலினால் வழக்கமாகச் செல்லும் நேரத்தைவிட 1 மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஆகிறது" என்று தெரிவித்தனர்.