வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (10/01/2018)

கடைசி தொடர்பு:09:40 (10/01/2018)

நிறுத்தப்பட்ட அலவன்ஸை வழங்கிட வலியுறுத்தி தூத்துக்குடி அனல்மின் நிலையம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அனல்மின் நிலையத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய மாதாந்திர அலவன்ஸ் பிடித்தம் செய்யப்பட்டதை ரத்துசெய்திட வலியுறுத்தி, 20 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனல்மின் நிலையத் தொழிலாளர்கள், தூத்துக்குடி அனல்மின் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

thoothukudi thermal workers protest

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின்கழகத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திட்டச் செயலாளர் மரிய ஜான் பிரான்சிஸ், “தென் மாவட்டங்களில் உள்ள பெரிய பொதுத்துறை நிறுவனம், தூத்துக்குடி அனல் மின் நிலையம்தான். இதிலுள்ள 5 யூனிட்டுகள்மூலம் நாள் ஒன்றுக்கு 1,050 யூனிட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டுவருகிறது. கடந்த 2003-ம் ஆண்டுக்கு முன்பு துவக்கப்பட்ட அனல்மின் நிலையங்கள் வெளியிடும் சாம்பலில் உள்ள மாசின் அளவு 100 mg/Nm3 என்ற அளவைத் தாண்டும் அனல் மின்நிலையங்களை மூடிவிட வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து, இந்த 5 யூனிட்டுகளையும் மூடிட தேதியையும் அறிவித்துவிட்டது.  அதன்படி, வரும் நவம்பர் 2018-ல் இருந்து 2021-ம் ஆண்டுக்குள் வரிசையாக 5 யூனிட்டுகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளது.  

இந்த 5 யூனிட்டுகளில், அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்ததால் இதன் உதிரிப் பாகங்கள் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, தற்போது 5 யூனிட்டுகளும் மொத்த கொள்ளளவில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த யூனிட்டுகளை வேண்டுமென்றே இயங்கவிடாமல் நிறுத்திவைத்து, தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி இதை மூடிட அரசே வழிசெய்துவருகிறது. இதன் முதல்கட்டமாக, இங்கு பணிபுரியும் அலுவலர்கள், தொழிலாளர்கள், பொறியாளர்கள் அனைவருக்கும் டிசம்பர் மாத அலவன்ஸ் எவ்வித முன்னறிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு யூனிட்டாக மூடி, தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவதுதான் அரசின் திட்டம். 

thoothukudi thermal workers protest

எரிவாயு அனல்மின் நிலையம் மற்றும் காற்றாலை உற்பத்தி நிலையங்களில் பணியிடத்தின் அடிப்படையில் அலவன்ஸ் வழங்கப்படுவதைப் போல, இங்கு பணிபுரியும் அனைவருக்கும் உற்பத்தி இலக்கைக் குறியீடாகக் கொள்ளாமல், பணியின் தன்மை அடிப்படையில் அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும். ஊதியப் பேச்சுவார்த்தையின்போது, தெர்மல் அலவன்ஸ் இரட்டிப்பாக உள்ள நிலையில், நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிறுத்திவைக்கப்பட்டுள்ள அலவன்ஸை வழங்கிட,அனல்மின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை  எடுத்திட வேண்டும். அதோடு, மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின்படி சீரமைத்து, 5 யூனிட்டுகளையும் இயக்கிட வேண்டும்” என்றார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க