வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (10/01/2018)

கடைசி தொடர்பு:15:03 (11/01/2018)

சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மாடு முட்ட வருமா?- அறிவியல் என்ன சொல்கிறது!

றவைகள் , விலங்கினங்கள் பற்றிய தவறுதலான கருத்து பலருக்கும் இருக்கும். மண்ணுளிப் பாம்புக்கு இரண்டு தலைகள் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால், அந்தப் பாம்புக்கு ஒரு தலைதான் உண்டு. வால் பகுதியும் தலை போல தடிமனாகக் காணப்படும் அவ்வளவுதான். ஆண்மை விருத்திக்கு மண்ணுளிப் பாம்பின் ரத்தம் பயன்படுவதாக மக்களிடையே மூட நம்பிக்கை உள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். 

மனிதர்கள் தொட்டால் குஞ்சுகளைப் பறவைகள் விலக்கிவிடுமா?

பறவைகளுக்கு மோப்பசக்தி மிகவும் குறைவு. அதனால், மனித வாடையை உணர்ந்துகொள்வது கடினம். ஆனால், நீங்கள் குஞ்சுகளை தொட்டுத் தூக்குவதைப் பார்த்தால் தீவிரமாகக் கண்காணிக்கும். இதேபோல அடிக்கடி செய்தால், குஞ்சுகளைக் கை விட்டுவிட வாய்ப்புள்ளது. 

  வாழும் இடத்துக்கு ஏற்ப மீன்கள் பெரியதாக வளருமா?

மீன்கள் அதன் மரபுப்படி  வளர்ச்சியடைகின்றன. வாழும் நீர்நிலைகளைப் பொறுத்து அவை வளர்ச்சிபெறுவதில்லை. சிறிய அளவிலான தொட்டிகளில் பெரிய மீன்களை வளர்த்தால், விரைவிலேயே நோய் தாக்கி இறந்துவிடக்கூடும்.

மீன்களுக்கு ஞாபகசக்தி உண்டா?

எல்லா மீன்களுக்கு ஞாபகசக்தி உண்டு. மனிதர்களை உணர்ந்துகொள்ளும். உணவு அளிக்கும் நேரம் அவற்றுக்குத் தெரியும். சோகத்தை உணர்ந்துகொள்ளும். சத்தங்களை உணர்ந்துகொள்ளவும் அவற்றால் முடியும். 

Rattlesnakes  தாக்குவதற்கு முன் எச்சரிக்கை செய்யுமா?

அப்படியெல்லாம் கிடையாது. பயத்தினால்தான் அவை வாலையாட்டுகின்றன. நான் இங்கே இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக அப்படிச் செய்கின்றன.

சுருண்ட பின்னர் பாம்பால் கொத்த முடியுமா? 

பாம்பால் எந்த நிலையில் இருந்தும் கொத்த முடியும். பாம்புகள், பாதுகாப்பு கருதியே உடலை சுருட்டிக்கொள்கின்றன. நாகப்பாம்புகள் பொந்துக்குள் செல்கையில், தலையை முன்னோக்கி வைத்துக்கொண்டு உடலை மெள்ள மெள்ள உள்ளே இழுக்கும். அந்தச் சமயத்தில் வாலைப் பிடித்து இழுப்பது ஆபத்தானது. பாம்பின் தலை பொந்தின் முன்பகுதியில்தான் இருக்கும். பாம்புகளின் தோல் மிருதுவானது. அவற்றைத் தொட்டால் பாம்புகளுக்குப் பிடிக்காது. 

பாம்புகள் ஜோடியாக பயணம் மேற்கொள்ளுமா... மகுடி இசைக்கு ஆடுமா? 

 பாம்புகள் இனப்பெருக்க காலத்தில்தான் ஜோடியைத் தேடிக்கொள்ளும். மற்றபடி இணையை உடன் வைத்துக்கொள்வதில்லை. சேர்ந்தும் பயணிப்பதில்லை. பாம்புக்கு காதுகள் கிடையாது. அதனால், கேட்கும் திறன் இல்லை. அதிர்வுகளை மட்டுமே உணரக்கூடியவை. மகுடி ஆடுகையில் அதன் கண்களுக்கு தடித்த கம்பு போல தெரியும். தாக்குவதிலிருந்து தப்பிப்பதற்காகவே மகுடியைப் பார்த்து தலையை ஆட்டுகின்றன.

வௌவால்களுக்கு பார்வை கிடையாதா? 

வௌவால்களுக்கு சிறிய கண்கள் உள்ளன. பார்வைத்திறனும் உண்டு. அபார மோப்ப சக்தியும், கேட்கும் சக்தியும் உண்டு. 

சிவப்பு நிறத்தைக் கண்டால் மாடு முட்டுமா?

மாடுகளின் கண்களுக்கு ப்ளாக் அண்டு ஒயிட்தான் தெரியும். நிறமெல்லாம் தெரியாது. ஸ்பெயின் மாடுபிடி வீரர்கள், சிவப்பு நிறத் துணியை அங்கேயும் இங்கேயும் ஆட்டுவதைப் பார்த்து, பயத்திலேயே மாடுகள் தாக்கவருகின்றன. மற்றபடி, தமிழ்ப் படத்தில் காட்டுவது போல சிவப்பு நிறத்தைப் பார்த்தெல்லாம் மாடு முட்ட வருவதில்லை. 

ஒட்டகத்தின் முதுகுத் திமிலில் தண்ணீரை சேமித்துவைக்குமா?

ஒட்டகத்தின் முதுகுத் திமில் கொழுப்பால் ஆனது. தண்ணீரை சேமித்துவைக்க முடியாது. 

யானையின் தோல் கடினமானதா... யானைகள் சத்தமிட்டுக்கொண்டே நடக்குமா? 

யானையின் தோல் மிகவும் சென்சிட்டிவானது. அதன்மீது அமர்ந்துசெல்லும்போது, பறப்பது போன்ற உணர்வைத் தரக் கூடியது. வெயிலை அதனால் தாங்கமுடியாது. அதனால்தான் அடிக்கடி குளியல் போட விரும்பும். மணலை அள்ளி உடல்மீது கொட்டிக்கொள்ளும். சருமத்தைப் பாதுகாக்க விரும்பும். குட்டிகளும் அதுபோன்று செய்கின்றனவா என்று தாய்யானைகள் கண்காணிக்கும். குட்டி யானைகளைத் தாய் யானைகள் தன் நிழலிலேயே அழைத்துவரும். யானைகள் அமைதியாக நடக்கும் தன்மையுடயவை. 

முதலைகள் சோகத்தில் இருக்கும்போது அழுமா? 

முதலைகளால் உணவை சுவைத்துச் சாப்பிட முடியாது. கிழித்துத் துண்டுகளாக்கி விழுங்கும் தன்மையுடயவை. அதன் நீர் சுரப்பிகள் தொண்டையை நெருங்கிய பகுதியிலேயே உள்ளன. உணவை சாப்பிடுகையில் முதலை தன் உடலில் உள்ள உப்பை கண்ணீர் வழியாக வெளியிடுகின்றன. இதைத்தான் முதலைக் கண்ணீர் என்பார்கள். 

எலிகள் பாலாடைக் கட்டியை விரும்பிச் சாப்பிடுமா?

எலிகளுக்கு இனிப்பு உணவுகள்தான் பிடித்தது. பாலாடைக் கட்டி அல்ல. அதுபோல, முயல்களுக்கு கேரட் மட்டுமே பிடித்த உணவு அல்ல. 

எல்லா சிலந்திகளும் வலை பின்னுமா?

இல்லை. ஒருசில வேட்டைச் சிலந்திகளுக்கு மட்டுமே அந்தத் திறன் உள்ளது. உணவு வேட்டையின்போது, அவை வலை பின்னி வேட்டையாடுகின்றன. விஷத்தன்மையுடய சிலந்திகள் நிறைய உண்டு. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க