வெளியிடப்பட்ட நேரம்: 09:31 (10/01/2018)

கடைசி தொடர்பு:09:43 (10/01/2018)

எப்படி இருக்கிறது நாட்டின் சிறந்த காவல் நிலையம்? கோவை ஆர்.எஸ் புரத்துக்கு ஒரு விசிட்

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கையில் விருது வாங்கியுள்ளது கோவை ஆர்.எஸ். புரம் காவல் நிலையம். இந்திய அளவில், சிறந்த காவல் நிலையங்களின் பட்டியிலில் உள்ள 5-இல், இரண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் நிலையங்கள்தான். முதல் இடத்தை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் பிடிக்க, ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது சென்னை அண்ணா நகர் காவல் நிலையம்.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

ஸ்காட்லாந்து போலீஸுக்கு நிகராகப் பேசப்பட்டு வந்த தமிழ்நாடு போலீஸின், இந்த இரண்டு காவல் நிலையங்கள் குறித்துதான், தற்போது ஆங்கில ஊடகங்களும் புகழ்ந்து தள்ளிவருகின்றன. அப்படி அங்கு என்னதான் இருக்கிறது என்று அறிய, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் சென்றோம்.

"பழகுவதில் இனிமை, பணியில் நேர்மை" என்ற பளீச் வாசகங்களுடன் நம்மை வரவேற்றது ஆர்.எஸ். புரம் காவல் நிலையம். வெறும் வாகனக்கூடுகளைக் கொண்ட காவல் நிலையங்களை மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்கு, இதன் பார்க்கிங் ஏரியா நிச்சயம் அதிசயம்தான்.  நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புத் தொட்டி, அது ஒரு காவல் நிலையம் என்பதை மறக்கடிக்கிறது.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

காவல் நிலையத்துக்குள் நுழைந்த உடனேயே, Let’s Join Together For A Crime Free Society (குற்றமற்றச் சமூகத்தை உருவாக்க இணைவோம்) என்று எழுதப்பட்டுள்ள  வாசகம்  நம்மை வரவேற்கிறது. காவல் நிலையத்தின் நுழைவுப்பகுதியில் ரிசப்ஷன் உள்ளது. அங்கு நமது தேவையைக் கேட்டுவிட்டு, அருகில் உள்ள காத்திருப்போர் அறையில் அமரவைக்கிறார்கள். நாளிதழ்கள், வார இதழ்கள், புத்தகங்கள் கொண்ட அந்த அறை, காவல் நிலையத்துக்கு வந்துள்ளோமே என்று பதற்றத்தில் இருப்போருக்கு ஆறுதலைக் கொடுக்கும்.

காவல் நிலையத்துக்கு வருபவர்களுக்காகச் சுத்தமான கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புகார் அளிக்க, காவல் கட்டுப்பாட்டு அறை, காவல் நிலையத்தின் லேண்ட்லைன் மற்றும் மொபைல் எண்கள், வாட்ஸ்அப் எண், லா அண்ட் ஆர்டர் இன்ஸ்பெக்டர் மற்றும் க்ரைம் போலீஸார்களின் மொபைல் எண்களும் போர்டில் வைக்கப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

குற்றச் செயல்களுக்கு, வழங்கப்படும் தண்டனை விவரங்கள்குறித்த சட்டப் பிரிவுகள் போர்டுகளில் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் அதிகாரிக்கும் தனித்தனியே கேபின் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் யாவும் எளிதில் எடுக்கும் வகையில், அழகாக அடுக்கப்பட்டுள்ளன.

மகளிர் காவல் பிரிவுக்குள் சென்றால், அங்கிருக்கும் பெண் காவலர்களை வைத்துத்தான் அது காவல் நிலையம் என்பதே நினைவுக்கு வருகிறது. புகார் கொடுக்க வருபவர்களின் குழந்தைகளுக்காக மழலையர் காப்பகம், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கவுன்சிலிங் வழங்க தனி அறை என்று வைத்து அசத்துகின்றனர். காவல் நிலையம் முழுவதும் உள்ள பளீச் சுத்தம், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தை, மற்ற காவல் நிலையங்களில் இருந்து விலக்கி தனித்துவத்துடன் காட்டுகிறது.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த ஓர் ஆண்டாகவே, உள்துறை அமைச்சகத்தின் ஸ்மார்ட் காவல் நிலையம் விருதுபெற இந்தக் காவல் நிலையத்தைக் கூடுதல் கவனத்தோடு பராமரித்துவந்தோம். இதை வீடியோவாக எடுத்து, டெல்லிக்கு அனுப்பினோம். பின்னர், அங்கிருந்து ஒரு டீம், இங்கு வந்து ஆய்வுசெய்தனர். சுத்தம் மற்றும் வசதிகள் மட்டுமல்லாமல், குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், உடைமைகளை விரைவாக மீட்டல், வாரன்ட் மீது உடனடி நடவடிக்கை, ஆவணங்களைப் பராமரித்தல் உள்ளிட்டவைகளும் முதல் இடம் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தன..

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தைத் தொடர்ந்து, தற்போது கோவையில் மண்டலவாரியாகக் காவல் நிலையங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றையும் ஸ்மார்ட் காவல் நிலையங்களாக மாற்ற உள்ளோம். படிப்படியாகக் கோவையின் அனைத்து காவல் நிலையங்களும், ஸ்மார்ட் காவல் நிலையங்களாக மாற்றப்படும்.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

தமிழகம் சார்பாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்த, இரண்டு காவல் நிலையங்களுமே முதல் ஐந்து இடத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பெருமையைத் தேடித்தந்த அனைத்துக் காவலர்களுக்கும் வாழ்த்துகள். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் அனைத்துமே சாத்தியம்தான்" என்றார்.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

தமிழ்நாடு காவல் துறைக்கு வாழ்த்துகள்.


டிரெண்டிங் @ விகடன்