வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (10/01/2018)

கடைசி தொடர்பு:20:42 (10/01/2018)

அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்குப் பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை!

ணம், நகை, பொருள்கள் எனப் பலவகையான கடத்தல், பல்வேறு வகையான திருட்டுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருபோம். இப்படி பல கடத்தல்கள் சமுதாயத்துக்குத் தெரிந்திருந்தாலும், பல கடத்தல்கள் இன்னும் வெளியுலகின் வெளிச்சத்துக்கே வராமல் இருக்கின்றன. அதில் முக்கியமானது தேனீக்கள் திருட்டு. தேனீக்கள் இயற்கையான பூச்சிகள்தானே... அதை ஏன் திருடப்போகிறார்கள், அதனால் என்ன லாபம் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், தேனீக்களை வைத்து உலக அளவில் மிகப்பெரிய வாணிப உலகமே இயங்குகிறது என்பது நம்மில் பெரும்பாலானோர்க்குத் தெரிவதில்லை. 

தேனீக்கள்

தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ, கிழக்குலகத் தேனீ, மேற்குலகத் தேனீ எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகை தேனீயும் உலகில் உள்ள நிலப்பரப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதுபோல ஒவ்வொரு கண்டத்திலும் வசிக்கிறது. ஒரு தேனீயால் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றார்போல மாற்றிக்கொண்டு வாழ முடியும். தேனீக்களிலிருந்து கிடைக்கும் தேன், பசை, மகரந்தம், பாகு, நஞ்சு போன்றவை நமக்குப் பல நன்மைகளைக் கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதுதவிர, நம் உணவை உற்பத்தி செய்ய மூலகாரணமும் தேனீக்கள்தாம். மூதாதையர்களின் வலிமையான உணவு தேனும், கிழங்கும் தாம். நம் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதிலும் தேனீக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிலந்திகள், பறவைகள், தட்டான்களும் உணவளிக்கின்றன. நம் உணவில் 84 சதவிகிதம் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையில் கிடைப்பவையே. காட்டு மரங்களின் இனப்பெருக்கத்துக்கு வழி செய்வதிலும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. 

இதில் என்ன வணிகம்! 

ஒரு தேன் கூட்டில் ராணித் தேனீ, சில ஆண் தேனீக்கள், பல வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். ராணி ஆண் தேனீக்களோடு புணர்ந்து பல வேலைக்காரத் தேனீக்களை உருவாக்கும். வேலைக்காரத் தேனீக்கள் தேன் சேகரிக்கும். காலத்தின் கட்டயத்தால், சில வருடங்களாகத் தேனீ வளர்ப்பு மிகப்பெரிய வணிகமாக மாறியிருக்கிறது. இப்போது பெரும்பாலான நிலங்களில் தேனீப் பெட்டிகள் வைத்திருப்பதே அதற்கு சாட்சி. மேலும், விவசாயிகள் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கைக்காக தேனீக்களை வாடகைக்கும் எடுத்துச் செல்கின்றனர். உலகளவில்,  3 வருடங்களுக்கு முன் 700 டாலராக இருந்த 2 கூடு தேனீக்களின் விலையானது தற்போது 1000 டாலராக உயர்ந்துள்ளது. ஒரு ராணித் தேனீயின் விலை 217 டாலர். 29 டாலராக இருந்த ஒரு காலனி தேனீக்களின் விலை இப்போது 240 டாலர். இதனால் தேனீக்களை வாடகைக்குக் கொடுத்து தேனீ வளர்ப்பாளர்கள் நல்ல லாபம் ஈட்டி வந்தனர். ஒரு காலனி தேனீக்கள் 40 முதல் 60 கிலோ தேன் கொடுத்தன. ஒரு கிலோ தேன் இந்தியாவில் சுமார் 160 ரூபாய் அளவில் விற்பனையாகிறது.

இந்நிலையில் உலகளவில் தேனீ திருட்டுச் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. வடக்கு வாய்கடோ, வெங்கனூய், டௌரங்கா, ஹொக்கியங்கா போன்ற பல பகுதிகளில் தேனீக்கள் திருடப்படுகின்றன. திருடர்கள் பார்வையாளர்கள்போல் வந்து நோட்டமிட்டுச் சென்று இரவில் வந்து திருடிச் செல்கின்றனர். இந்தியாவிலும் மீரட் பகுதியில் கடந்த 6 வருடங்களில் புலந்த்சாஹார், அம்ரோஹா, சனரங்கப்பூர் பகுதிகளில் 135 காலனிகள் திருடு போயிருக்கின்றன. சஷாராபூரில் ஆறு மாதங்களில் சுமார் 400 திருட்டுகள் பதிவாகியுள்ளன. கலிஃபோர்னியாவில் ட்வெரேடினோவ் என்பவர் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள பல கூடுகளைத் திருடியதாகக் கைதுசெய்யப்பட்டார். 

திருடப்படும் தேனீக்கள்

இந்தத் திருட்டால் நமக்கு ஏற்படும் பாதிப்பு! 

திருடுபவர்கள் தேனீக்களைப் பல வகைத் தேனீக்களோடு இனப்பெருக்கம் செய்ய வைப்பதால் சில நாட்டுத் தேனீக்கள் அடியோடு அழிந்து போகின்றன. பல்வகை இனப்பெருக்கம், செயற்கை உரம் போன்ற காரணிகளால் 44% தேனீக்கள் இப்போது அழிந்துவிட்டன. தேனீக்களை திருடுபவர்களை கலிஃபோர்னிய காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். ஆனால், நம்மூரில் நிலையே வேறு. இந்தியாவில் தேனீக்கள் திருட்டு குறித்து புகார் அளிக்கச்சென்றால், வழக்குப்பதிவு செய்யவே காவல்துறையினர் தயங்குகின்றனர். இதை ஒரு வழக்காகவே எடுத்துக்கொள்வதில்லை. 

தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை நடக்காது. பல வகை மரங்கள், பழங்கள், கிழங்குகள் அழிந்து போகும். சுற்றுச்சூழல் சீர்கேடு நடக்கும். அப்புறமென்ன?  'கிணத்தைக் காணோம்' என்பது போல 'சோத்தைக் காணோம்' என்று நாம் மட்டுமல்ல சிலந்திகளும் பறவைகளும் அலைய வேண்டியதுதாம் .


டிரெண்டிங் @ விகடன்