வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (10/01/2018)

கடைசி தொடர்பு:11:25 (10/01/2018)

முடிவுக்கு வந்த இளைஞர்கள் மர்ம மரண விவகாரம்!

விழுப்புரம் மாவட்டத்தில், மர்மமாக இறந்த இரண்டு இளைஞர்களின் வழக்கு, 8 நாள்களுக்குப் பிறகு தற்போது முடிவுக்குவந்திருக்கிறது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வசந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர், கிருபாநிதி (20). கூலித் தொழிலாளி வீரமணி (20). +2 மாணவன் கோபிநாத் (17) ஆகிய மூவரும் கடந்த 2017 டிசம்பர் 31-ம் தேதி இரவு, மர்மமான முறையில் ஆதிச்சனூர் செல்லும் சாலையில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்தனர். தகவலறிந்த அவர்களது உறவினர்கள், அவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கிருபாநிதியும், வீரமணியும் இறந்துவிட, கோபிநாத் மட்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கிருபாநிதியின் தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவுசெய்த காவல்துறை, கொலையா... விபத்தா? என்ற கோணத்தில் விசாரணையைத் துவக்கியது. இதற்கிடையில், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளைக் கைதுசெய்தால்தான் சடலங்களைப் பெற்றுக்கொள்வோம் எனப் போராட்டத்தில் குதித்தனர் உறவினர்கள்.

விழுப்புரம்

பல்வேறு அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் குதிக்கவே, மாவட்டம் முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அதையடுத்து, மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, இருவரது உடல்களையும் அடக்கம் செய்தனர் உறவினர்கள். இந்நிலையில்தான் கடந்த 8-ம் தேதி இரவு வீரபாண்டி கிராமத்தின் வி.ஏ.ஓ-விடம் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தான் ஏற்படுத்திய விபத்தினால்தான் இருவரும் உயிரிழந்தனர் என்று சொல்லி சரணடைந்தார். அதன்பிறகு, காவல்துறை அவரிடம் நடத்திய விசாரணையில், ”டீச்சர் டிரெய்னிங் முடித்த நான் சொந்தமாக இரு டிராக்டர்கள் வைத்திருக்கிறேன். ஒன்று கரும்பு லோடு ஏற்றிச்செல்லவும், மற்றொன்றை நிலத்தை உழவு செய்யவும் பயன்படுத்திவருகிறேன். வசந்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நிலத்தை உழவுசெய்து தரும்படி என்னிடம் கூறினார். அதற்காக இரவோடு இரவாக உழவு செய்துவிட்டு மறுநாள் புத்தாண்டை ஜாலியாகக் கொண்டாடலாம் என்று நினைத்து டிசம்பர் 31-ம் தேதி மது அருந்திவிட்டு, ஆதிச்சனூர் வழியாக வசந்தகிருஷ்ணாபுரம் சென்று கொண்டிருந்தேன்.

மரணம்அப்போது, சாலை ஓரம்  மூன்று பேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் விலகிவிடுவார்கள் என்று டிராக்டரில் வேகமாகச் சென்றேன். ஆனால், அவர்கள் விலகவில்லை. அதனால், டிராக்டரின் பின்னால் மாட்டப்பட்டிருந்த ரொட்டவேட்டர் (கலப்பைகள்) இயந்திரத்தில் சிக்கி காயமடைந்தனர். அதில் கிருபாநிதியும், வீரமணியும் மயங்கி விழுந்துவிட, கோபிநாத் மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

இந்த விபத்து, கிராம மக்களுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்ற பயத்தில் உடனே டிராக்டரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற நான், என் மனைவியிடம் மட்டும் நடந்ததைக் கூறினேன். யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதால், அதே ஊரில் மீண்டும் உழவு வேலைக்கு சென்றுவிட்டேன். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வந்ததால், டிராக்டரை வேட்டவலத்தில் ஒரு மெக்கானிக் ஷாப்பில் விட்டுவிட்டு, போலீஸின் விசாரணையை மறைமுகமாக அந்த கிராமத்தில் இருந்து கொண்டே கண்காணித்தேன். எப்படியும் போலீஸ் என்னைப் பிடித்துவிடும் என்ற பயத்தில்தான் சரணடைந்தேன்” என்று வாக்குமூலம் அளித்தார். அதையடுத்து, திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.