வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (10/01/2018)

கடைசி தொடர்பு:10:43 (10/01/2018)

தந்தையின் ஃபேஸ்புக் வேண்டுகோள் வீணானது! - 18 வயது தீவிரவாதி சுட்டுக் கொலை

தீவிரவாதக் குழுவில் சேர்ந்த மகனை, வீடு திரும்புமாறு தந்தை ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்த நிலையில் , பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட சண்டையில் 18 வயது ஃபார்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீர் இளைஞர் சுட்டுக் கொலை

வடக்கு காஷ்மீரில், குல்கான் மாவட்டம் கத்வானி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஃபார்கான் வானி, தீவிரவாதக் குழுவில் சேர்ந்தார். நவம்பர் 24-ம் தேதி, அவரின் தந்தை குலாம் முகமது வானி, ஃபேஸ்புக் பக்கத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுமாறு மகனுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்து , பதிவிட்டிருந்தார். அதில், ' நீ என்னை விட்டுப் பிரிந்ததிலிருந்து துயரத்தில் உள்ளேன். வீட்டை விட்டுச் சென்று 6 மாத காலமாயிற்று. ஒவ்வொரு நிமிடமும் உன்னைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருகிறேன். நீ நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன். நான் உன் தந்தை. நான் உன்னை திருத்தவில்லையென்றால் வேறு யார் உன்னைத் திருத்த முடியும்? நீ, மீண்டும் வீட்டுக்கு வரவில்லையென்றால்,  சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

நீ கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். ஆனால், நீ திரும்பி வரும்போது, நான் உயிரோடு இருக்க மாட்டேன். உன் செய்கையால் எனது உடல் நடுங்குகிறது. உன் அம்மாவைவிட வேறு யார் உன்னை ஆழமாக நேசித்துவிட முடியும்? விரைவில் வீடு திரும்புவாய் என்று நம்புகிறேன். நீ தேர்ந்தெடுத்த பாதை, உனக்கு துன்பத்தையும் துயரத்தையும்தான் தரும். உனக்கு நல்வழி காட்டாது'  என்று கூறியிருந்தார்.

ஆனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் மஜித் கான் என்பவர், லஸ்கர் இ தொய்பா தீவிரவாதக் குழுவில் இணைந்தார். அவரின் தாயார் உருக்கத்துடன் அனுப்பிய வீடியோ மெசேஜ், மஜித் கானின் மனதைக் கரைத்ததையடுத்து, அவர் மனம் மாறி மீண்டும் வீடு திரும்பினார். அதே போல, தன் மகனும் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து மீண்டும் வீடு திரும்புவார் என்று குலாம் ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், அந்த தந்தையின் வேண்டுகோள் வீணாகிப்போனது. ஆனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், ஃபார்கான் வானி செவ்வாய்க்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டார். 

காஷ்மீரில், தீவிரவாதக் குழுவில் சேர்ந்த இளைஞர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தால், அவர்கள்மீது எந்த வழக்கும் பதியப்படுவதில்லை. போலீஸ் நிலையத்துக்கும் அவர்கள் வரத் தேவையில்லை. நேரடியாக குடும்பத்தினருடன் இணைந்து நல்ல முறையில் வாழ்க்கையைத் தொடங்க சட்டம் வழிவகைசெய்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க