பேருந்து விபத்தால் நிலைகுலைந்துபோன பயணிகள்! பறிபோன 3 உயிர்கள்; வேதனையில் 37 பேர்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே   தனியார் பேருந்து, டிராக்டருடன் மோதிய விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். 37 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறார்கள்.

விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வந்துகொண்டிருந்த சந்திரா என்ற தனியார் பேருந்து, அருப்புக்கோட்டைக்குள் நுழையும் முன் புளியம்பட்டி எனுமிடத்தில் டிராக்டருடன் மோதிக் கவிழ்ந்தது. இதில் தனியார் பாலிடெக்னிக்  மாணவர்கள், பெயின்டர் என மூவர் பலியானார்கள். பேருந்தில் கூட்டம் அதிகம் என்பதால், படிக்கட்டில் பயணம்செய்துள்ளனர்.

தொடரும் விபத்து

வழக்கத்தைவிட அதிக கூட்டம் இருந்ததால், அதி வேகமாகச் சென்ற பேருந்து, கட்டுப்பாடில்லாமல் டிராக்டர் மீது மோதித் தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்ததில், பேருந்துக்குள் சிக்கி மோசமாக இறந்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வர அரசு முயற்சிக்காததால், இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக ஆனதால்தான் இப்படிப்பட்ட விபத்துகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். இதில், 37 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை தீயணைப்புப் படையினர், பேருந்தை நிமிர்த்தி அடியில் கிடப்பவர்களை  பொதுமக்களுடன் சேர்ந்து மீட்டுவருகிறார்கள். இதுபற்றி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் விசாரணைசெய்துவருகின்றனர்.

இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பாலமுருகன், அருண் இருவரும் காரியாபட்டி போகர் பாலி டெக்னிக் மாணவர்கள். மாரிச் செல்வம் (58) பெயின்டர். 37 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 9 பெண்கள், 9 ஆண்கள் உள்நோயாளிகளாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 8 ஆண்கள், 6 பெண்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சைபெற்றுவருகின்றனர். கஸ்தூரி (68) என்ற பெண்மணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!