தமிழகம் முழுவதும் உள்ள ஜாய்ஆலுக்காஸ் நகைக்கடைகளில் வருமான வரித்துறை சோதனை!

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள ஜாய்ஆலுக்காஸ்  நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். வருமானவரி செலுத்துவதில் முறைகேடு நடைபெற்றதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, இந்தச் சோதனை நடக்கிறது. 

கடந்த சில மாதங்களாகவே மத்திய அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர், ஜி.எஸ்.டி அதிகாரிகள் என தமிழகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களில் சோதனை செய்துவருகின்றனர். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் வீடுகள், நிறுவனங்கள் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வுசெய்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல் நகைக்கடை, வணிக நிறுவனங்கள் என அடுத்தடுத்து சோதனைகள் தொடர்கின்றன.

இந்த நிலையில், ஜாய்ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு உலக அளவில் 140 கிளைகள் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 14 கிளைகள் செயல்பட்டுவருகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அதிக அளவு தங்கம் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது நடைபெற்ற வியாபாரத்தில், தங்கம் வாங்கியதற்கான உரிய வரி செலுத்தவில்லை போன்ற புகார்களை அடுத்து, சென்னை, சேலம், நாகர்கோவில், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜாய்ஆலுக்காஸ் நடைக்கடைகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தில் சோதனை

கேரளாவை தலைமையிடமாகக்கொண்ட ஜாய்ஆலுக்காஸ் நிறுவனம், தமிழகத்திலும் முக்கிய நகரங்களில் கிளைகளைத் தொடங்கி செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பாக, ஒவ்வொரு கிளைகளிலும் தங்கம், வெள்ளி, வைர நகைகளுக்காக தனித்தனி செக்‌ஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜிமிக்கி கம்மல்களுக்காக சிறப்புக் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, வகைவகையான கம்மல்களுக்கான சிறப்பு விற்பனையும் நடைபெற்றது. 

இன்று ஒரே நேரத்தில், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நகைக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 8 உயர் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், இந்தச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

சோதனை

நெல்லை டவுனில் உள்ள நிறுவனத்தில், காலை 8 மணி முதல் சோதனை நடக்கிறது. அதிகாலையில் உள்ளே நுழைந்த வருமான வரித்துறையினர், அங்குள்ள நகைகளின் அளவு, விற்பனையான நகைகளுக்கு போடப்பட்ட ரசீதுகள் ஆகியவற்றை சோதனையிட்டு வருகின்றனர். கடையின் மேலாளர் தவிர வேறு யாரையும் கடைக்குள் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் உள்ள நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் இயங்கிவரும் ஜாய்ஆலுக்காஸ் கிளையில், காலை 10 மணியளவிலிருந்து 6 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். கேரளாவில் உள்ள ஜாய்ஆலுக்காஸிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!