வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (10/01/2018)

கடைசி தொடர்பு:12:26 (10/01/2018)

`உங்க பதிலில் திருப்தியில்லை' - அமைச்சருக்கு எதிராகப் பொங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ; அதிர்ந்த சட்டப்பேரவைக் கூட்டம்

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மூன்றாவது நாளாக இன்று கூடியது. இன்றைய சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலத்துக்கும் இடையே பனிப்போர் நடந்தது.

vijayabaskar
 

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், முதல்வர் பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தற்போது பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார். முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் போர்க்கொடி தூக்கியபோது, அவரின் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக்கொண்ட தோப்பு வெங்கடாச்சலத்தை கட்சியின் அமைப்புச் செயலாளராக அறிவித்தார் தினகரன். அதன்பின், தினகரன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றதோடு, மதுரை மேலூரில் தினகரன் நடத்திய பொதுக்கூட்டத்திலும் தோப்பு வெங்கடாசலம் பங்கேற்றார். ஆனால், அணிகள் இணைந்த பின்னர் அதில் அங்கமானார் தோப்பு வெங்கடாச்சலம். இருந்தாலும் தினகரன் ஆதரவாளர் என அ.தி.மு.க-வினரே பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவையின்போது `தங்கள் தொகுதிக்குட்பட்ட விஜயமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும்’ என்று  அ.தி.மு.க எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் கோரிக்கை வைத்தார். அதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ``ஈரோடு - திங்களூரில் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. விஜயமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டியதில்லை'' என்றார். அதற்குப் பதில் கருத்து தெரிவித்த தோப்பு வெங்கடாச்சலம் ``அமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை’' என்றார். எப்போதும் புள்ளி விவரங்களை சட்டப்பேரவையில் பேசும் சுகாதாரத்துறை அமைச்சரின்  இந்தப் பதில் திருப்தியளிக்கவிலை’ என்று குறிப்பிட்டார். விஜயபாஸ்கருக்கு எதிராகத் தோப்பு வெங்கடாச்சலம் கருத்து தெரிவித்ததும் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெங்கடாச்சலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க