தமிழக எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் லட்சத்தைத் தொட்டது! மசோதாவை தாக்கல்செய்தார் துணை முதல்வர்

தமிழக எம்.எல்.ஏ-க்களின் சம்பள உயர்வு தொடர்பான மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல்செய்தார். இதற்கு தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழக எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தை ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சி எம்.எல்.ஏ-க்களும் வரவேற்பு அளித்தாலும், தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்தன.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக எம்.எல்.ஏ-க்களின் சம்பள உயர்வு தொடர்பான மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்செய்தார். அதன்படி, 50,000 ஆக இருந்த சம்பளம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ.2,50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.12,000 -திலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. 

எம்.எல்.ஏ-க்களின் சம்பள உயர்வு மசோதாவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னை இருக்கும்போது, ஊதிய உயர்வு தேவையில்லை. தமிழகம் பெரும் நிதிச்சுமையில் சிக்கியுள்ளதாக அரசே கூறிவரும் நிலையில், இது தேவையா" என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!