வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (10/01/2018)

கடைசி தொடர்பு:16:37 (10/01/2018)

`ராஜ கண்ணப்பன் கதை, தினகரனுக்குத் தெரியுமா?!’ - அ.தி.மு.க நிர்வாகிகளை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்று 18 நாள்கள் ஆகிவிட்டன. ' இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எனக்கு வாக்களியுங்கள்' எனக் கேட்ட தினகரனுக்கு ஆதரவாக எந்த எம்.எல்.ஏவும் சட்டசபையில் குரல் எழுப்பவில்லை. ' தினகரனுக்கும் அ.தி.மு.கவுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பது செய்தித் தொடர்பாளர்களிடம் கண்டிப்புடன் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தினகரன் போட்ட வழக்குகளும் முடிவுக்கு வராது' என்கின்றனர் ஆளும்கட்சி அமைச்சர்கள். 

'தமிழக சட்டசபையில் தினகரன் வருகை புயலைக் கிளப்பும்' என அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசி வந்த நிலையில், சபைக்கு வெளியே அவர் கொடுக்கும் பேட்டிகள் மட்டும்தாம் அதிரவைத்துக்கொண்டிருக்கின்றன. ' யாரும் பார்க்காதபோது ஒரு அமைச்சர் எனக்கு வணக்கம் வைத்தார்; இரண்டு எம்.எல்.ஏ-க்கள் என்னை நேரில் பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள்' என அவர் கூறும் கருத்துகள் எல்லாம் மீம்ஸ்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. 'சட்டப்பேரவையில் தி.மு.கவோடு சேர்ந்து வெளிநடப்பு செய்யாதது ஏன்?' எனக் கேள்வி எழுப்பியபோதும், ' நான் அவர்களுடன் கள்ள உறவு வைத்திருப்பதாகக் கதைகட்டி விடுவார்கள். நல்ல உறவையே விரும்புகிறேன்' எனச் சிரித்துக்கொண்டே பதிலளித்தார் தினகரன். இந்நிலையில், சபை நடவடிக்கைகளைப் பற்றி அமைச்சர்களிடம் விரிவாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ' எந்தச் சூழலிலும் அ.தி.மு.கவுக்குள் தினகரன் வந்துவிட முடியாது. அவருக்கும் இந்தக் கழகத்துக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஏதாவது குழப்பத்தை விளைவிக்க முடியாதா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி நீடிக்கும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.கவை அசைக்க முடியாது என நான் கூறிய வார்த்தைகள்தாம், சட்டசபைக்குள் நடந்துகொண்டிருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் தினகரனால் எந்த வேகத்தையும் காட்ட முடியாது.

உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களைக் களமிறக்க தினகரன் விரும்பினால், அவருக்குப் பல சிக்கல்கள் காத்திருக்கின்றன. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரையில், அரசியல் கட்சியாகப் பதிவு செய்திருந்தால் மட்டுமே யூனிபார்ம் சின்னம் கிடைக்கும். சட்டமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளிலும் லோக்சபாவில் 2 எம்.பி தொகுதிகளிலும் போட்டியிட்டிருந்தால் யூனிபார்ம் சின்னம் கிடைக்கும். அப்படிப் பார்த்தால், தினகரனுக்குத் தனித்த சின்னம் எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதன் விளைவாக, அவர் பக்கம் இருக்கும் ஒரு சிலரும் கவுன்சிலர் பதவிகளுக்காக நம்மிடம்தான் வருவார்கள். அவர்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை.

தினகரன்

சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் ராஜ கண்ணப்பன். தேர்தல் ஆணையத்துக்கு எதிரான இந்த வழக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்துக்கொண்டே போகிறது. இரட்டை இலைக்கு எதிராக தினகரன் போட்ட வழக்கும் இப்படித்தான் ஆகும். ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.கவைவிட 14 சதவிகித வாக்குகளை அதிகம் வாங்கியிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் நமக்கும் தி.மு.கவுக்கும் 1 சதவிகித வாக்கு வித்தியாச இடைவெளிதான் இருந்தது. இப்போது நம்மைவிட 14 சதவிகிதம் தி.மு.க பின்தங்கிவிட்டது. உள்ளாட்சியில் 45 சதவிகித வாக்குகளை நாம் பெறுவோம். உள்ளாட்சிக்குப் பிறகு தினகரனும் காணாமல் போய்விடுவார்' என விவரித்திருக்கிறார். அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை ஏற்றுக்கொண்டனர். 

இதன்பின்னர் அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர்களுக்குச் சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார் முதல்வர். அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ' நீங்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். கழகத்துக்கும் தினகரனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இதனை நீங்கள் தொலைக்காட்சி விவாதத்தில் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். அ.தி.மு.கவில் தினகரன் அணி என்ற தோற்றத்தை சிலர் வலிந்து திணிக்கிறார்கள். உங்களிடம் சிலர் பேசும்போதும், ' தினகரனும் வந்துவிட வேண்டும். அவர்மேல் தனிப்பட்ட முறையில் மதிப்பு இருக்கிறது' என்றெல்லாம் பேசுவதைக் கேட்கிறேன். இதுபோன்று அவசியமற்ற கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். அ.தி.மு.கவுக்கும் தினகரனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இதையும் மீறி தினகரனுக்கு ஆதரவான தொனியில் யாராவது கருத்து தெரிவித்தால், அவர்களிடம் இருக்கும் பதவி உறுதியாகப் பறிக்கப்பட்டுவிடும்' என எச்சரித்திருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆளும்கட்சி முக்கிய நிர்வாகி ஒருவர், " முதல்வர் இப்படிச் சொல்வதற்கும் மிக முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. சசிகலா குடும்பத்தின் மீது இன்றளவும் சில முக்கிய நிர்வாகிகள் பாசமாக உள்ளனர். தொலைக்காட்சி விவாதங்களில் சிலர் இதை மறைமுகமாக வெளிப்படுத்திவிடுகின்றனர். இதனால், எடப்பாடி-ஓ.பி.எஸ் அணி மீதான நம்பகத்தன்மையை தொண்டர்கள் இழக்கின்றனர். இவற்றையெல்லாம் சரிக்கட்டும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தினகரனிடம் இருக்கும் கொஞ்சம் சிலரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள்" என்றார் விரிவாக. 

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி குறித்து முதல்வருக்குக் கடிதம் எழுதிய மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமாரை குறிவைத்து சாடியிருந்தார். ' அவர்களுக்குள் பங்காளிச் சண்டை தொடங்கிவிட்டது' எனக் கலாய்த்தார் தினகரன். ' ஆளும்கட்சியை விமர்சிக்கும் ஒரு சுயேச்சை' என்ற அளவிலேயே தினகரனின் செயல்பாடுகளைக் கவனித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 


டிரெண்டிங் @ விகடன்