வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (10/01/2018)

கடைசி தொடர்பு:13:20 (10/01/2018)

`உங்களுக்கு உயர்த்த முடியும்... எங்களுக்கு உயர்த்த முடியாதா?’ -  முதல்வருக்கு எதிராக சீறும் தொழிற்சங்கங்கள் 

பஸ் ஸ்டிரைக்

எம்.எல்.ஏ.வுக்கு சம்பளத்தை உயர்த்த மனமிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏனோ, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தி வழங்க மனமில்லாததது எங்களுக்கு வருத்தமளிக்கிறது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர் வேலை நிறுத்தத்தால் முழுமையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4-ம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தம் இன்றுவரை தொடர்கிறது. போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டுநர்கள், நடத்துநர்களின் வேலைநிறுத்தம்குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதனால், சட்டபேரவையில் 110-வது விதியின்கீழ் போக்குவரத்துக் கழக ஓய்வூதியோர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயை வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை, தொழிற்சங்கங்கள் யானைப் பசிக்கு சோளப்பொறியாகவே பார்க்கின்றனர்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க நிர்வாகிகள் லட்சுமணன், ஆறுமுகம் ஆகியோர் கூறுகையில்,``கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ.2000 கோடி நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும். நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, 1,250 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையில் 204 கோடி ரூபாயை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கொடுக்க அரசுத் தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், பணத்தை அரசு வழங்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஊதிய உயர்வு கேட்டு ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழிற்நுட்ப ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கடந்த 7 நாள்களாக ஈடுபட்டுவருகின்றனர்.

தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 750 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளார். இது, யானைப் பசிக்கு சோளப்பொறியாகவே இருக்கும். ஏனெனில் 1.4.2017-ம் தேதிக்குப்பிறகு போக்குவரத்துக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு எந்தவித பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. போக்குவரத்து கழக கணக்குப்படி மாதத்துக்கு சராசரியாக 500 பேர் ஓய்வு பெறுகின்றனர். அதன்படி கணக்கீட்டால் ஆண்டுக்கு 6,000 பேர் ஓய்வு பெறுகிறார்கள். ஏப்ரல் மாதத்திலிருந்து 2017 டிசம்பர் மாதம் வரை 8 மாதங்கள் வரை சராசரியாக 4,000 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு இன்னமும் ஓய்வூதியப் பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மட்டுமே சுமார் ரூ. 1,200 கோடி வரை அரசு கொடுக்க வேண்டியதுள்ளது. எனவே, எங்களது வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும். மேலும், எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பளத்தை உயர்த்த பணமிருக்கும் அரசாங்கத்திடம் ஏனோ, ஓடாய் உழைக்கும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்தை உயர்த்த பணமில்லாததது வருத்தமளிக்கிறது" என்றனர்.