வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (10/01/2018)

கடைசி தொடர்பு:14:30 (10/01/2018)

காலையிலேயே செருப்புக்கடை ஓனரை அதிர்ச்சியடையவைத்த கொள்ளையர்கள்!

நெல்லையில் உள்ள செருப்புக்கடையில், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 10 லட்சம் ரூபாயை கொள்ளை  யடித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

கடையில் கொள்ளை

நெல்லை சந்திப்புப் பகுதியில் செருப்பு மொத்த வியாபாரம் செய்பவர், தக்காராம். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள செருப்புக் கடைகளுக்கு மொத்தமாக செருப்புகளை விற்பனை செய்துவருகிறார். இவர், நேற்றிரவு கடையை  அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். இன்று காலை கடையைத் திறக்க வந்தபோது, வெளிப்பக்கப் பூட்டு உடைக்கப்பட்  டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த மேஜையின் டிராயர் உடைக்கப்பட்டு, பொருள்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேஜையில் வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளயடிக்கப்பட்டிருந்தது. மொத்த வியாபாரத்தின்மூலம் கிடைத்த பணத்தை கொள்ளையர்கள் எடுத்துச்சென்றதால் அதிர்ந்த தக்காராம், இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். 

நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீஸார் விரைந்துவந்து கடையில் சோதனை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கடையில் கைரேகைகள் பதிவுசெய்யப்பட்டன. கடையில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால், நெல்லை சந்திப்புப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.