`3 மாதமாகச் சம்பளம் இல்லாமல் குடும்பத்தை எப்படி நடத்த முடியும்?' - புதுச்சேரியிலும் தொடங்கியது போராட்டம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், சம்பளத் தொகையை வழங்கக் கோரி ரேஷன் கடைகளை மூடியதோடு, தலைமைச் செயலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்பட்டுவரும் 388 ரேஷன் கடைகளில், சுமார் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த 13 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2017 டிசம்பர் 31-ம் தேதி, தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்ட ஊழியர்கள், தரையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர். அதையடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் துறையின் இயக்குநர் பிரியதர்ஷினியைச் சந்தித்த அவர்கள், நிலுவைத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். அப்போது, நிலுவைத் தொகைக்கான கோப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் இயக்குநர் பிரியதர்ஷினி.

புதுச்சேரி

ஆனால், அதன்பிறகும் அவர்களின் சம்பள விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், இன்று புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் மொத்தமாக இழுத்துப் பூட்டிய ஊழியர்கள், பேரணியாக வந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிறகு, அங்கு காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். ”13 மாதங்களாக சம்பளம் இல்லாமல் குடும்பத்தை எப்படி நடத்த முடியும்? குழந்தைகளை வைத்துக்கொண்டு அன்றாட வாழ்க்கையை சமாளிக்கவே மிகவும் சிரமமாக இருக்கிறது. அதனால்தான் தற்போது தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம்” என்றனர். ஊழியர்களின் தொடர் போராட்டத்தால், பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர் அதிகாரிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!