சென்னை வந்ததும் மனம்மாறிய காதலன்! சகோதரி, தாயாருடன் உயிரை மாய்த்துக்கொண்ட காதலி

நெல்லை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சீதை. இவர்களுக்கு சொர்ணமாரி, பத்மா என்ற இரு மகள்கள் இருந்தனர்.  மூத்த மகள் சொர்ணமாரி, தபால்துறை நடத்திய தேர்வில் வெற்றிபெற்று, வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு தபால் ஊழியராகப் பணியில் சேர்ந்தார். 

அம்பாசமுத்திரத்திலிருந்து சங்குபுரத்துக்கு  தினமும் பேருந்தில் பணிக்குச் சென்றுவந்தார். அப்போது, சங்கரன்கோவிலிலிருந்து சங்குபுரம் செல்லும் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய வேலுச்சாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சொர்ணமாரி தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் சங்குபுரம் கிராமத்திலேயே வாடகை வீடு எடுத்து தங்கினார். அப்போது வேலுச்சாமியுடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய முடிவுசெய்திருந்த நிலையில், பழனி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, இரு குடும்பத்தினரும் சொர்ணமாரிக்கும் வேலுச்சாமிக்கும் இடையே திருமணம் செய்ய முடிவுசெய்தனர். சொர்ணமாரி 4 மாத கர்ப்பம் அடைந்த நிலையில், அதையும் வேலுச்சாமி கலைக்கச் செய்துள்ளார்.

இந்த நிலையில், திடீரென வேலுச்சாமி சென்னைக்குச் சென்றுவிட்டார். அங்கு சென்ற பின்னர் சொர்ணமாரியுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். திருமணம் செய்யவும் மறுத்திருக்கிறார். இதனால் மனம் உடைந்த சொர்ணமாரி, தனது தாய் சீதை மற்றும் தங்கை பத்மா ஆகியோருடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். தனது குடும்பத்தினரின் தற்கொலைக்கு வேலுச்சாமி, மெர்சி, குமுதா, ராம்கி என்ற ராமச்சந்திரன் ஆகியோரே காரணம் என்றும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!