'சிறை நட்பால் சீரழிந்த கைதியின் குடும்பம்' -  சென்னை பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்

மாதிரி படம்

சிறையில் ஏற்பட்ட நட்பைப் பயன்படுத்தி, சென்னையில் இரண்டு பெண்களிடம் தவறாக நடந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி செல்வி (பெயர் மாற்றம்). மணிகண்டனின் தங்கை குமுதா (பெயர் மாற்றம்) . இவர்கள் இருவரும் எம்.கே.பி நகர்  அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், 'சில நாள்களுக்கு முன்பு நான்கு பேர் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள், கத்தி முனையில் எங்களிடம் தவறாக நடந்துகொண்டனர். அதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர்' என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து, எம்.கே.பி நகர் மகளிர் போலீஸார் விசாரித்தனர். செல்வியும் குமுதாவும் கொடுத்த புகார் அடிப்படையில் வியாசர்பாடியைச் சேர்ந்த சதீஷ், அஜய்குப்தா, யுவராஜ், ராஜேஸ் ஆகிய 4 பேரை போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். 
 விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 'புகார் கொடுத்த செல்வியின் கணவர் மணிகண்டனும் சதீஷும் சிறையில் இருந்தபோது  நண்பர்களாகியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். அப்போது, மணிகண்டன் வீட்டுக்கு சதீஷ் வந்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினரை சதீஷுக்கு அறிமுகப்படுத்திவைத்துள்ளார். அதன்பிறகு, மணிகண்டன் வீட்டுக்கு சதீஷ் சென்றுள்ளார். சம்பவத்தன்று சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள், மணிகண்டன் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் மணிகண்டன் இல்லை. செல்வியும், குமுதாவும் இருந்துள்ளனர். அவர்களிடம், கத்தி முனையில் நான்கு பேரும் தவறாக நடந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையின்  அடிப்படையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்கப்படும்' என்றனர். சென்னையில், கத்திமுனையில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!